கனடாவில் 77 வயது மனைவியைக் கொலை செய்த 78 வயது முதியவர்
கனடா
கனடாவின் மொண்ட்ரியல் பகுதியைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் தனது 77 வயது மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லாவல் பகுதியைச் சேர்ந்த ரொனால்ட் திபோல்ட் என்பவரே இக்குற்றச்சாட்டு தொடர்பாக புதன்கிழமை காணொளி மாநாடு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மொனிக் திபோல்ட் பொய்ரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவலின் சோமேடி மாவட்டத்திலுள்ள ஜீன்-பெராட் அவென்யூவில் அமைந்துள்ள இத்தம்பதியினரின் வீட்டில் இருவரும் காயமடைந்த நிலையில் இருப்பதை, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங்கு சென்ற லாவல் பொலிஸார் கண்டறிந்தனர்.
அவர்களில் மொனிக் திபோல்ட் பொய்ரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது கணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னரே பொலிஸ் விசாரணையாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இச்சம்பவம் ஒரு கொலை மற்றும் தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொண்ட்ரியல் பகுதியில் கடந்த ஏழு நாட்களில் பெண்ணொருவர் தனது வீட்டிலேயே கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மொண்ட்ரியல் நகரின் மையப் பகுதியிலுள்ள குடியிருப்பில் 45 வயதான லீலா பென் சேலம் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போதிலும், அந்தச் சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.























