ஓட்டலில் மசாலா தோசை சாப்பிட சென்றவருக்கு அதிர்ச்சி
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போரிவலி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மசாலா தோசைக்குள் செத்த எலி இருந்ததை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அது தொடர்பில் முறைப்பாடு செய்த்தை அடுத்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓட்டலின் வணிக உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமித் திரிவேதி என்பவர் தனது 2 சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவு உண்பதற்காக ஒரு ஓட்டலுக்குச் சென்றார்.
அங்கு அவர் மைசூர் மசாலா தோசை ஒன்றை ஆர்டர் செய்தார். தோசையை சில வாய் சாப்பிட்ட பிறகு, உணவுக்குள் ஏதோ வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார். சாப்பிட்ட உணவை பார்த்தபோது அதற்குள் சிறிய இறந்த எலி இருப்பது தெரியவந்துள்ளது.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போரிவலி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். திரிவேதி அளித்த புகார், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதை தொடர்ந்து, ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை FDA இடைநீக்கம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.





















