• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை, எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க...

சினிமா

அன்றைய திருவாங்கூர் மன்னரின் அந்த மாளிகையில் தான் இன்றைய திரைப்பட உலகின் மகுடம் தரிக்காத மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது அன்புத் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கியிருந்தார் . கவுரி பிக்சர்ஸ் ' பரிசு ' திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்காக தேக்கடியில் .
சிறிய தீவுக்குள் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு மக்கள் திலகத்தைப் பார்க்க படகில் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன் .
திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம்.
ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர்.
அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர்.
நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள்.
ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்!
அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார்.
விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர்.

அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன்.
‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம்.
இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே.
இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே.
அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.
இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டனர் .
அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். உள்ளே ஒரு அறைக்குள் போனார்.
சற்று நேரத்தில் வெளியே வந்தார்.
அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார்.
அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக் கும்பிட்டனர் .
இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.

 

- தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதிய எம்ஜியாரின் மறுபக்கம்

Leave a Reply