ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் 60 நாட்களுக்கு நீடித்தது கனடா
எபோலா வைரஸ் பரவல் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் 60 நாட்களுக்கு நீடித்துள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 8,000-ஐக் கடந்துள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருந்த இக்கட்டுப்பாடுகள், தற்போது எதிர்வரும் நவம்பர் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளன.
இம்மூன்று நாடுகளையும் சேர்ந்தவர்களுக்கான விசாக்கள் மற்றும் பயண அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே கனடாவின் நிரந்தரக் குடியுரிமை அனுமதி பெற்றிருந்தும் கனடாவுக்கு வெளியே இருக்கும் ஆயிரக்கணக்கானோர் இதனால் நாட்டிற்குள் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த 21 நாட்களில் காங்கோ ஜனநாயகக் குடியரசிற்குச் சென்று வந்த வெளிநாட்டவர்கள் கனடாவுக்குப் பயணிக்கவோ அல்லது கனடா வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தென் சூடான் மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் வெளிநாட்டவர்கள் 21 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். மேலும், இப்பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பும் கனடியக் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த மே மாதம் முதல் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 3,900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வரலாற்றில் மிக வேகமாகவும், அதிக உயிரிழப்புகளை (48% இறப்பு விகிதம்) ஏற்படுத்தக்கூடியதுமான எபோலா பரவலாக இது பதிவாகி வருகிறது.
காங்கோவில் நோயாளிகளைக் கவனிக்க சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கனடாவின் இக்கட்டுப்பாடுகளால் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.






















