அமெரிக்காவில் டிக்டொக் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டொலர் அபராதம்
அமெரிக்காவில் டிக்டொக் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிக்டொக் செயலியும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், சிறார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் மாற்றங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன.
சிறார்களைச் செயலியில் அடிமையாக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க மாநில ஒன்றுடன் டிக்டொக் மேற்கொண்ட முதல் உடன்பாடு இணக்கப்பாடு இதுவாகும்.
இந்த இணக்கப்பாட்டின் படி, அலபாமாவில் உள்ள சிறார்களுக்கு தினமும் அதிகபட்சமாக 2 மணி நேரப் பயன்பாட்டு வரம்பு விதிக்கப்படுவதுடன், இரவிலும் பாடசாலை நேரங்களிலும் பயன்பாட்டுத் தடைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.
மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பயன்பாட்டைக் கடுமையாகக் கண்காணிக்க புதிய வசதிகள் மற்றும் வயது உறுதிப்படுத்தும் முறைகள் அமைக்கப்படும். பெரியவர்கள் சிறார்களின் கணக்குகளை எளிதில் கண்டறிவது தடுக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய தொடர்புகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
அத்துடன் சிறார்களுக்கான கணக்குகளில் அழகு சார்ந்த “கொஸ்மெடிக் பில்டர்கள்” பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அலபாமா மாநிலத்தின் இறுதி நிபந்தனைகளை டிக்டொக் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறினால், டிக்டொக் கூடுதலாக 300 மில்லியன் டொலர் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அதே வேளையில், ஒப்புக்கொண்ட 100 மில்லியன் டொலர் நிதியை அடுத்த 45 நாட்களுக்குள் அலபாமா மாநிலத்திடம் டிக்டொக் வழங்க வேண்டும். அதேசமயம் அனைத்து பயனர்களுக்கும், குறிப்பாக பதின்ம வயதினருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என்று டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.






















