• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் ஸ்மார்ட் கண்ணாடிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா

செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் 'INMO Smart Glass AIR3' கண்ணாடிகள், அதிகப்படியான பயன்பாட்டின் போது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தி முகத்தில் தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அக்கண்ணாடிகளை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா சுகாதாரத் துறை மற்றும் அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து இந்தத் தயாரிப்பைத் திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது கண்ணாடியின் இடது பக்கப் பகுதி அதிகளவில் சூடேறுவதாகக் கனடா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

"வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சாதனத்தின் ஃபார்ம்வேரை பதிப்பு 3.16 (Version 3.16)-க்கு புதுப்பித்த பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்" என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடியின் வலது பக்கக் காலின் உள்பகுதியில் 'AIR3' மற்றும் 'INMO' என்ற லேபிள் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்மார்ட் கண்ணாடி மீடியா ஸ்ட்ரீமிங், ஏஐ நேரலை மொழிபெயர்ப்பு மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 17 நிலவரப்படி கனடாவில் காயம் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், அமெரிக்காவில் இந்தக் கண்ணாடி அதிகளவில் சூடானதாக 10 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் கண்ணாடியை அணிந்திருந்தபோது முகத்திலும், இடது காதுப் பகுதியிலும் சுடும் உணர்வு ஏற்பட்டதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கண்ணாடியின் புகைப்படம், ஆர்டர் எண் மற்றும் வாங்கிய தளம் ஆகிய விவரங்களுடன் inmoxr.com வலைத்தளம் வழியாக நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு INMO கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், கனடா நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்புச் சட்டத்தின்படி, திரும்பப்பெறப்பட்ட பொருள்களை மீண்டும் விற்பனை செய்வதோ, விநியோகிப்பதோ அல்லது இலவசமாகக் கொடுப்பதோ கூடக் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது எனக் கனடா சுகாதாரத் துறை நினைவூட்டியுள்ளது.  
 

Leave a Reply