• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் - 4 பேர் கைது

கனடா

கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்த முயன்ற விவகாரத்தில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் மூலம் 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பீல் பிராந்திய போலிஸார் மற்றும் கனடா எல்லைச் சேவை முகவர் நிறுவனம் ஆகியவை இணைந்து பல மாதங்களாக நடத்திய கூட்டு சோதனையின் பலனாக 95 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து போதைப்பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

33 வயதான அனோஷன் ஆல்ஃபிரட், 40 வயதான ஜெஃப்ரி உல்காக், 32 வயதான ஜெர்மைன் தாம்சன் மற்றும் 42 வயதான ரெனால்டோ கிளார்க் ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த 4 நபர்களும் விமான நிலைய ஊழியர்களா என்பது குறித்து போலிஸார் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பும் அதன் நம்பகத்தன்மையும் அங்கு பணிபுரியும் நபர்களின் நேர்மையைச் சார்ந்தே உள்ளது. நாட்டின் பரபரப்பான இந்த விமான நிலையத்தைக் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த விசாரணை மிக முக்கியப் பங்காற்றியுள்ளது என பீல் பிராந்திய போலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

கனடிய விமான நிலையங்களில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாகக் கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Leave a Reply