அதிகாலை வீட்டின் சுவரை உடைத்து அச்சுறுத்திய காட்டு யானை - உயிர் தப்பிய வயோதிப குடும்பம்
இலங்கை
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகளின் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் உள்ள வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் யன்னலை உடைத்ததுடன், வீட்டினுள் இருந்த அரிசிப் பைகள் மற்றும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் (25.09.2026) அதிகாலை 3 மணியளவில் மீண்டும் அதே வயோதிப குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியதுடன், அப்பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
குறித்த வயோதிப குடும்பத்தினர் தனிமையில் வசித்து வரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருந்தால், உயிராபத்து ஏற்பட்டிருக்கக்கூடிய நிலை காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
யானை ஏற்படுத்திய சேதம் தொடர்பில் அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும், இதுவரை சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்லை எனவும், இதற்கான நிரந்தரத் தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“யானைக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ அல்லது யானையை சுட்டு வீழ்த்தும் சம்பவம் ஏற்பட்டாலோ உடனடியாக அதிகாரிகள் வருகின்றனர்.
ஆனால், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது ஏன் அதே அளவிலான அக்கறை காட்டப்படுவதில்லை?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






















