• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாங்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்- ஐ.நா. பொதுச்சபையில் ஈரான் அதிபர் பேச்சு

ஐ.நா. பொதுச்சபையில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை பயங்கரவாத நாடு என வர்ணித்திருந்தார். இதற்கு ஈரான் அதிபர் நாங்கள் பயங்கரவாதிகளால் பாிதக்கப்பட்டவர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசினார். அப்போது அவர் ஈரானை பயங்கரவாத நாடு என்று வர்ணித்தார். அத்துடன் ஈரான் என்ற பயங்கரவாத ஆட்சி மோசமாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பது அல்ல. மாறாக, அவர்கள் பலவீனமாகவும் விரக்தியிலும் இருப்பதே ஆகும். ஈரான் அரசு இந்த ஆண்டில் தனது சொந்த குடிமக்கள் 72,000-க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் இன்று ஈரான் அதிபர் பெசெஸ்கியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எங்களை பங்கரவாதி என்று வர்ணித்துள்ளார். நாங்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

எந்தவொரு சட்ட நடைமுறையோ அல்லது காரணமோ இன்றி, எங்களின் மதிப்பிற்குரிய உயரிய தலைவர் படுகொலை செய்யப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன்.

உண்மையில், ஒரு பள்ளிக்கூடம் மீதே குண்டு வீசப்பட்ட ஈரானிலிருந்து நான் வருகிறேன். இந்தக் குழந்தைகளைப் பார்க்கிறீர்களா? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களை கொண்ட குண்டுகளால் இந்தக் குழந்தைகள் உயிரிழந்தனர்.

எங்களது நாட்டின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களுக்கு எங்களது அப்பாவி மக்கள் இலக்காகினர். நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைப் பாதுகாத்துக் கொண்டோம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் மீது தாக்குதல் நடத்தின. அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் மண்டியிடவில்லை.

நாங்கள் பதிலடி கொடுத்தோம், ஆனால் பொதுமக்களைத் தாக்கவில்லை.

காசாவில் 80,000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் வசம் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் இனப்படுகொலையைச் செய்து வருகின்றனர்; பின்னர், மற்றவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

நாங்களா நிலையற்ற தன்மைக்குக் காரணம்? நாங்கள் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம்.

நாங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வேறொரு நாட்டின் மீதோ அல்லது பிரதேசத்தின் மீதோ தாக்குதல் நடத்தியதில்லை. ஆனால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் தொடர்ந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு காரணமாகவும், பயங்கரவாத நாடாகவும் ஈரான் ஏன் இப்போது சித்தரிக்கப்படுகிறது.

ஈரான் தனது அதிகாரத்தை ஆதிக்கத்திற்காகப் பயன்படுத்தவோ அல்லது பிற நாடுகளின் நலனைப் பாதித்துத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவோ ​​விரும்பவில்லை.

இவ்வாறு பெசெஸ்கியன் பேசினார்.


 

Leave a Reply