ஆழிப்பேரலை பேரழிவில் காணாமல் போன மனைவி - விடாது தேடும் கணவர்
ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரழிவின்போது காணாமல் போன தனது மனைவியை, அவரது கணவர் கடந்த பல ஆண்டுகளாக கடலுக்குள் டைவிங் செய்து தேடி வரும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
யுகோ டகாமாட்சு என்ற தனது மனைவியை ஆழிப்பேரலைக்குப் பின்னர் தேடிய அவரது கணவர் யாசுவோ டகாமாட்சு, முதல் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டுள்ளார்.
அப்போது மனைவியின் கைத்தொலைபேசி மட்டுமே கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மனைவியைத் தேடும் நோக்கில் 2013ஆம் ஆண்டு முதல் அவர் முறையான டைவிங் பயிற்சி பெற்று, யுகோவை கடைசியாகப் பார்த்ததாகக் கூறப்படும் கடல் பகுதியில் தேடுதல் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை 763 முறை கடலுக்குள் டைவிங் செய்து மனைவியைத் தேடியுள்ள யாசுவோ டகாமாட்சு, தனது உயிர் உள்ளவரை இந்தத் தேடுதல் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
மனைவியை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது நீண்டகால தேடுதல் முயற்சி தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.





















