எரிபொருள் விலை மீண்டும் உயருமா- மக்களுக்கு புதிய எரிபொருள் மானியம்
இலங்கை
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SouthAsians & Diaspora
அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்கள் அவசரமாக ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், அது பொதுமக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், தொழிற்துறை நடவடிக்கைகள், மின்சார உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போதைய நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவது தொடர்பில் ஐஎம்எப் உடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தித் துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணத் திட்டத்தை அறிவித்திருந்தது. அதன் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டது.
இதற்காக மூன்று மாத காலப்பகுதியில் திறைசேரிக்கு சுமார் 60 பில்லியன் ரூபா செலவாகியிருந்தது. இந்த நிவாரணத் திட்டம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐஎம்எப் முக்கிய நிபந்தனையொன்றை விதித்துள்ளது. TravelGuides & Travelogues
அதன்படி, எரிபொருள் விலைகள் உண்மையான செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளும் உயர்ந்துள்ளதால், தற்போதைய விலை மட்டத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், டீசல் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















