திரைப்படங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
சினிமா
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1991-ம் ஆண்டின் விதிகளை திருத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் காட்சிகளுக்கு சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மது, புகையிலை அல்லது போதைப்பொருள் பழக்கத்தை நியாயப்படுத்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
திரைப்படங்களின் தலைப்புகள் ஆத்திரமூட்டும் வகையிலோ, ஆபாசமாகவோ அல்லது யாரையும் புண்படுத்தும் வகையிலோ இருக்கக்கூடாது. இதை திரைப்படச் சான்றிதழ் வாரியம் நன்றாக ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
வன்முறை மற்றும் சமூக விரோதச் செயல்கள் போற்றப்படவோ, நியாயப்படுத்தப்படவோ கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான காட்சிகளை காட்டக்கூடாது.
7 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய, பெற்றோரின் வழிகாட்டுதலில் இருக்கும் குழந்தைகள் பார்க்கக்கூடிய பட மாக இருந்தால் 'யு/ஏ 7+' பிரிவில் வகைப்படுத்த வேண்டும்.
13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தமான படங்கள் 'யு/ஏ 13+' என வகைப்படுத்தப்பட வேண்டும். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருத்தமான படங்கள் 'யு/ஏ 16+' என வகைப்படுத்தப்பட வேண்டும்.
குழந்தைகளை குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களாகவோ சித்தரிக்கக்கூடாது. மேலும், உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களைத் துன்புறுத்துவது மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதைக் காட்டக் கூடாது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவிக்காத வகையில் திரைப்படங்கள் இருக்க வேண் டும் என்பதை வாரியம் உறுதி செய்ய வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.






















