• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அண்ணா என்று மக்களாலும்,அறிஞர் என்று சான்றோராலும் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்...

சினிமா

’நகரேஷு காஞ்சி’ (நகரங்களில் சிறந்தது காஞ்சி) என்று புகழப்பட்ட காஞ்சி மாநகரில் பிறந்து பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி எனும் பன்முகத் திறனோடு வாழ்ந்து வரலாற்றில் தடம்பதித்த காஞ்சிபுரம் நடராசன் (சி.என்.) அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
’அண்ணா’ என்று மக்களாலும், ’அறிஞர்’ என்று சான்றோராலும் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் அவர். தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ஆற்றொழுக்காக (fluently) பேசக்கூடிய திறனாளர். மொழிபெயர்ப்புக் கலையிலும் முத்திரை பதித்த வித்தகர் அண்ணா என்பதற்குச் சான்று பின்வரும் நிகழ்வு:  ????
ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் பங்கேற்ற கல்வியாளரான, திவான் பகதூர் சர். ஏ. இராமசாமி முதலியார் (Known as A.R Mudaliar) அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அண்ணா. 
முதலியார் தம்முடைய உரையில் இராபர்ட் கிளைவ் (a British officer and statesman who played a crucial role in establishing British control over India in the 18th century) பற்றிக் குறிப்பிடும்போது, ”He came to India as Robert Clive and became Robber Clive" என்று சொல் விளையாட்டு நிகழ்த்தினாராம்.  அவையோர் அனைவரும் அதனை மிகவும் இரசித்துவிட்டு, இத்தொடரை அண்ணா எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனராம்.
அண்ணா சற்றும் அயராமல், ”திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்” என்று அதனை மொழிபெயர்க்க, கேட்டோர் வியந்து விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழியாக்கத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. 
”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” ஆகியவை அண்ணாவின் புகழ்பெற்ற சொல்லாடல்களில் சில. இவற்றில் ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலரின் திருமந்திரம். அண்ணா இதனைப் பயன்படுத்தியதால் இது அண்ணாவின் சொந்த வசனம் என்றே பலரும் நினைத்ததுண்டு.  ????
’ஒருவனே தேவன்’ (monotheism) எனும் கோட்பாட்டை அவர் கைக்கொண்டதால், கடவுளர் சிலைகளை உடைக்கும் திருப்பணியில் இறங்கவில்லை. தி.க.வினரின் சிலை உடைக்கும் கலை குறித்து அவரிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது,
”நான் தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம்!”???? 
’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும்’ திறன் அண்ணாவுக்கே உரித்தான தனித்திறன். எழுத்துத்துறையிலும் தடம்பதித்து நாடகங்கள், நாவல்கள், கட்டுரைகள், நையாண்டிப் படைப்புகள் எனப் பல்வேறு வடிவங்களில் பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்தவர் அவர்.

அவருடைய சொக்கவைக்கும் சுந்தரத்தமிழ்ப் பேச்சையும், சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்களையும், அவரது ஆட்சியின் மாட்சியையும் இன்னும் சிறிதுகாலம் பயன்கொள்ளத் தமிழர்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. 
1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்னையில் மக்கள் அலைகடலெனத் திரண்டனர். சுமார் ஒன்றரை கோடி பேர் திரண்ட அந்த இறுதி ஊர்வலக் கூட்டம், உலகிலேயே மிகப்பெரிய இறுதிக் கூட்டமாகக் கின்னஸ் உலக சாதனைப் பதிவில் இடம்பெற்றுள்ளது. 

 

~மேகலா இராமமூர்த்தி

Leave a Reply