கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது
கனடா
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.
இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை.
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.






















