• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாவகச்சேரியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள் திருட்டு - இருவர் கைது

இலங்கை

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தத் திருட்டு தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்று (14.09.2026) நண்பகல் சாவகச்சேரி காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்

விசாரணை அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்கள் 14 இலட்சத்து 2 ஆயிரத்து 997 ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர் எனவும், மற்றையவர் திருட்டுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்கள் முறையே நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply