ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு
சினிமா
" பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் தம்பி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சியில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.
தம்பி , எம்.ஜி.ஆர் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.
அந்த வேதனைக் காலத்தை நினைக்கும்போது அதனுடன் ஒப்பிட்டு இன்று அல்லல்படும் மக்களை எண்ணி, அவர் வேதனைப்படுகிறார். அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?
மக்கள் கொடுக்கும் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான் அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக் கழகமே உள்ளது. தம்பி எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னாலான உதவியைச் செய்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல நல்ல காரியங்களைச் செய்வதினால் பெருமைப்படுகிறேன் ! "
- அறிஞர் அண்ணா (நம்நாடு - 4.12.61)






















