22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்
கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) - கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர். இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த கருவை பயன்படுத்த முடிவு செய்தனர்.
இருப்பினும், கிரேக்கத்தில் 54 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்க சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பை எட்டிய நிலையில் இருந்ததால், அந்த நாட்டின் தேசிய இனப்பெருக்க மருத்துவ அதிகார சபையிடம் விசேட அனுமதி பெற்று, ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்டினா 3.49 கிலோகிராம் எடையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
உயிரிழந்த தங்கள் மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு 'ஜோர்ஜியா' என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
22 ஆண்டுகள் பழமையான கரு மூலம் குழந்தை பிறந்தமை மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரேக்கத்தில் நிலவும் பிறப்பு விகிதக் குறைவைக் கருத்திற்கொண்டு, IVF சிகிச்சைக்கான 54 வயது வரம்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















