இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் புதிய மோசடி - சிக்கிய தொழிலதிபர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை' (Smart keys) திருடி விற்பனை செய்த சட்டவிரோத குழுவைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை திருடிய துறைமுக ஊழியரை துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மற்றுமொரு தொழிலதிபரும் சிக்கியுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த ஊழியர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு சாவியை 6000 ரூபாய் முதல் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் பல மாதங்களாகச் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்து அந்த ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குருநாகல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரை பொலிஸார் கைது செய்து அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.






















