• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனமழையால் கடும் பாதிப்பில் கனடிய விவசாயிகள்

கனடா

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பருவகாலத்தின் இறுதிக்கட்டத்தில் பெய்து வரும் கனமழை, ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளை மேலும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

நிலங்களில் அதிகளவில் ஈரம் தேங்கியுள்ளதால் மாகாணத்தின் பல பகுதிகளில் அறுவடைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அண்மைய பயிர் அறிக்கையின்படி, சஸ்காட்செவனில் இதுவரை 27 சதவீதம் பயிர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக இக்காலக்கட்டத்தில் சராசரியாக 58 சதவீதம் அறுவடை முடிந்திருக்கும் நிலையில், தற்போதைய நிலைமை மிக மோசமாகப் பின்தங்கியுள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் தாமதமான பனிப்பொழிவு மற்றும் வசந்த கால வெள்ளப்பெருக்கு காரணமாக விதைப்பதே தாமதமானது.

தற்போது பெய்யும் மழை அறுவடையை மேலும் நீடிக்கச் செய்துள்ளது என சஸ்காட்செவன் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பில் பிரிபில்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மழைக்கால தாமதம் காலத்தை விரயமாக்குவதுடன், கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் தரத்தைக் குறைத்து, விளைச்சலையும் லாபத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருபுறம் மழைக்கால பாதிப்புகள் நிலவ, மறுபுறம் சுங்கவரிகள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள், உரம், விவசாய இயந்திரங்கள் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. 

Leave a Reply