• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான சிங்க நெபுலா - புகைப்படத்தை வெளியிட்ட நாசா

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான சிங்கத்தின் உருவம் கொண்ட சிங்க நெபுலா என்று அழைக்கப்படும் NGC 2392 -வின் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.

நடுத்தர நிறை (mass) கொண்ட நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் பிற்பகுதியில் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான ஒரு தோற்றம் ‘கோள் நெபுலா’ என்று அழைக்கப்படுகிறது.

அத்தகைய நட்சத்திரம் அதன் மையத்தில் அணுக்கரு வினைகளை தக்கவைக்க முடியாதபோது, அது நிலையற்றதாகி துடிக்க தொடங்குகிறது. பின்னர் அது தனது வெளிப்புற அடுக்குகளை உதிர்க்கிறது.

அவை வாயு மற்றும் தூசிக்களால் ஆன ஓடுகளாக மாறி, ‘கோள் நெபுலா’ என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்குகின்றன.

இதனை நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகள் வெளிப்புறமாக தள்ளுவதால், வெண் குள்ளன் எனப்படும் மிகவும் வெப்பமான ஒரு மையப்பகுதி எஞ்சி நிற்கிறது.

சிங்க நெபுலாவில் ஆக்சிஜன் நிறைந்த மைய நட்சத்திரம் இறந்ததை தொடர்ந்து, வெண் குறுங்கோள் ஒன்று எஞ்சி காணப்படுகிறது. அது தன்னை சுற்றியுள்ள பொருட்களை உள்ளிருந்து வெப்பத்தில் உமிழ்ந்து, சிங்கத்தின் முக தோற்றத்தை ஒத்த அயனியாக்கப்பட்ட வாயு குமிழியை உருவாக்குகிறது.

தொடக்கத்தில் நெபுலா வடிவத்தை பழமையான தொலைநோக்கியின் வழியாக பார்த்த வானியலாளர்கள், இதன் வட்டமான தோற்றம், பச்சை நிற பொருட்களால் காட்சியளிக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற வாயுக்களால் ஆன பெருங்கோள்களை ஒத்திருப்பதாக கருதினர்.

ஆனால் அவை நடுத்தர அளவிலான நட்சத்திரங்களின் இறப்பின் போது நிகழும் ஒரு தோற்றமாக உருவானதை வானியலாளர் பின் நாட்களில் கண்டறிந்தனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டு நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, இந்த கோள் நெபுலாவை ஆய்வு செய்திருந்தது. அப்போது அதன் உருவம், சிங்க முகத்தையும் வால்மீன் வடிவ பொருட்களால் ஆன மங்கலான ‘பிடரி மயிர்’ ஒத்த தோற்றத்தையும் கொண்டிருந்தது.

இதையடுத்து தற்போது நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி NGC 2392 என்று அழைக்கப்படும் சிங்க நெபுலாவின் புதிய தோற்றத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக அண்மை அகச்சிவப்பு (NIRCam) கேமரா மற்றும் நடு அகச்சிவப்பு கருவி (MIRI) ஆகியவற்றை பயன்படுத்தி தெளிவான படத்தை பதிவுசெய்துள்ளது.

இந்த சிங்க நெபுலாவின் மையத்தில், இறந்து போகும் தருவாயில் உள்ள நட்சத்திரங்களின் எச்சங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply