சதொசவின் நிதி நெருக்கடி - 31 விற்பனை நிலையங்கள் மூடல்
இலங்கை
2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ’லங்கா சதொச’ நிறுவனம் 24 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அக்காலகட்டத்தில், அந்நிறுவனம் 11 பில்லியன் ரூபா கடனையும், 5 பில்லியன் ரூபா வங்கி மேலதிக பற்று வசதியையும் கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






















