• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகில் அருகிவரும் மனித இனம்?

இன்றைய உலகத்தைக் கட்டியாள்பவன் மனிதன். தனக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறான். நிலத்தில் மாத்திரமன்றி ஆகாயத்திலும் அவனது ஆட்சிதான். நிகழ் காலத்துக்கு மாத்திரமன்றி எதிர் காலத்துக்கும் சேர்த்து அவன் திட்டமிடுகிறான். உலகிலே பல்வேறு உயிரினங்கள் இருந்தாலும் மனிதன் நினைத்தால் மாத்திரமே அவற்றால் உயிர் வாழ முடியும். படைத்தல், காத்தல், அழித்தல் என சர்வ வல்லமை மிக்கவனாக விளங்கும் மனிதனின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகி உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

மனித இருப்புக்கு அச்சுறுத்தல் என்றதும் நீங்கள் உடனடியாக நினைக்கக் கூடிய விடயம் மூன்றாம் உலகப் போர் அல்லது இயற்கையின் பெரும் சீற்றங்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஊழிக் காலம் பற்றி யோசிக்கக் கூடும். ஆனால், மனிதனிடம் இருந்தே மனிதனின் இருப்புக்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே அண்மையில் வெளியான ஒரு ஆய்வின் முடிவு.

உலகின் இன்றைய சனத்தொகை 8.3 பில்லியன். வேகமாக உயர்ந்துவரும் சனத்தொகை 2100ஆம் ஆண்டில் 11.2 பில்லியனாக உயரும் என 2015ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு நடக்கப் போவதில்லை என்பதே தற்போதைய கணிப்பாக உள்ளது. மனித இனத்தின் பெருக்கம் முன்னரைப் போல இல்லை, அது பல்வேறு காரணங்களால் வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பதே பிந்திய தகவல்.
 
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, உயர்வடைந்து வரும் மனித சனத்தொகை 2080ஆம் ஆண்டில் 10.3 பில்லியன் என உச்சத்தைத் தொட்டு, 2100 ஆம் ஆண்டில் 10.2 பில்லியனாகக் குறைவடைவதற்கான வாய்ப்பே உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்குக் காரணம் மனித இனப்பெருக்கத்தில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சியே.

‘கண்ணுக்குப் புலப்படாத உண்மை: சுருங்கும் உலகின் பொருளாதாரங்கள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு அமெரிக்காவின் பென்னிசில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜீசஸ் பெர்னான்டஸ்-வில்லவேர்டே மற்றும் வடமேற்கு பல்கலைக் கழக ஆய்வாளர் பற்றிக் நொறிக் ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்டது.
 
உலகின் சனத்தொகையை வழக்கமான வளர்ச்சி வேகத்தில் வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் பருவமடைந்த பெண்கள் குழந்தைகளைப் பெற வேண்டும், குழந்தை பெறும் சராசரி 2.2 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய வீதம் 2.19 ஆகவே உள்ளது. மரணத்தைத் தழுவுகின்ற ஒவ்வொரு மனிதனும் பிரதியீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அது நிகழப் போவதில்லை என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

உலகில் அழிந்துவரும் உயிரினங்கள் எனப் பல உள்ளதை நாமறிவோம். அவற்றைக் கண்டறிந்து, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாக அறிவித்து, அவற்றின் இனப் பெருக்கத்தை ஊக்குவித்து அவற்றை அழிவில் இருந்து காக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனிதன் தனது சொந்த இனத்தைக் காப்பதற்கும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளானோ எனச் சிந்திக்கத் தூண்டுகிறது இன்றைய நிலவரம்.

சனத்தொகைப் பெருக்கம் காரணமாக உலகின் பல நாடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் 1970களில் அறிமுகம் செய்யப்பட்டன. பல நாடுகள் அந்த முயற்சியில் வெற்றியும் கண்டன. திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்தலைப் பெரிதாக நினைக்கும் மேற்குலக நாடுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமற்றவர்களாகப் பெண்கள் உள்ளன. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற திட்டம் காரணமாக உலகின் அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா தற்போது இரண்டாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.
 
இன்றைய உலகில் நிலவும் வாழ்க்கைச் சுமை இரண்டு குழந்தைகளோடு வாழ்வதே சிறந்தது என்ற சிந்தனையைத் தோற்றுவித்து உள்ளது. தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சூழலில் எண்ணிக்கை குறைவான குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையை இலகுவானதாக மாற்றுகிறது. அதேவேளை, அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் உள்ள வறிய குடும்பங்கள் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

236 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கியதாக 1950ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உள்ள தரவுகளைப் பெற்று குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 219 நாடுகளில் குழந்தைப் பேற்று வீதம் குறைவடைந்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாட்டிலும் குழந்தை பிறப்பில் 0.062 வீத வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய நிலையில் உலக சனத்தொகை சுருங்கி வருவது அவதானிக்கப்படவில்லை. கடந்த தலைமுறையினர் இன்னமும் தேவையான அளவில் குழந்தைகளைக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமை இன்னும் மூன்று பத்தாண்டுகளுக்கு மாத்திரமே நீடிக்கும். அதன் பிறகு நிலைமை மாறத் தொடங்கும். 2056ஆம் ஆண்டில் 9 பில்லியன் என உச்சத்தைத் தொடும் உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் அதன் பிறகு குறையத் தொடங்கும் என்கிறது ஆய்வு.
 
பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட மற்றும் மேற்குலக நாடுகளில் மாத்திரமே குழந்தை பிறப்பு வீதம் விழ்ச்சி காணுகின்றது என நினைப்பது தவறானது. மூன்றாம் உலக நாடுகளிலும் நிலைமை அதுவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக தாய்லாந்தில் கடந்த வருடத்தில் குழந்தை பிறப்பு வீழ்ச்சி 0.87 ஆகவும், கொலம்பியாவில் 1.01 ஆகவும், ஈரானில் 1.35 ஆகவும், பிரேசிலில் 1.52 ஆகவும் சராசரிக்கும் குறைவாகவே பதிவாகி உள்ளது.

குழந்தை பிறப்பு வீதத்தில் காணப்படும் வீழ்ச்சி மீண்டும் பழைய நிலையை எட்டுவதற்கு வாய்ப்புகள் தற்போதைய நிலையில் குறைவாகவே உள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு. ஏனெனில் இந்த வீழ்ச்சிக்குப் அநேக காரணங்கள் உள்ளன. வீடு மற்றும் குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்டுள்ள அதிகரித்த செலவினம், தொழில் நிச்சயமின்மை, கருத்தடை சாதனங்களின் பயன்பாடு, மாறிவரும் சமூக விழுமியங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இது விடயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆனால், இதில் எது முக்கிய காரணம் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலை உள்ளது. அதேவேளை, இந்தக் காரணங்களுள் ஒன்றைக் கூட உடனடியாக மாற்றியமைத்துவிட முடியாத நிலையும் உள்ளது.

குறைந்து வரும் மக்கள் தொகை தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு வழிசமைக்கும் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. முதியோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் உலகளாவிய அதிகரிப்பு, அவர்களின் பராமரிப்புச் செலவு, ஓய்வூதியக் கொடுப்பனவு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக் கூடியவை. 2 விழுக்காடு சனத்தொகை அதிகரிப்பு காரணமாக தொழிலாளர்களின் வீழ்ச்சி 0.5 வீதமாகக் குறைவதால் நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நீண்ட காலத்தில் 1.5 விழுக்காடு இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
 
உலக சனத்தொகை வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி நிலை தொடர்பில் பல தரப்புகளில் இருந்தும் அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.
 
உலகின் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனாவில் ‘ஒரேயொரு குழந்தை’ என்கின்ற கொள்கை தளர்த்தப்பட்டு உள்ளது. உலகின் பெரிய நாடுகளுள் ஒன்றான ரஸ்யாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கமே ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. அந்த நாட்டில் கருத்தரிப்பு வீதம் 1.305 முதல் 1.374 வீதமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் அமுலில் இருந்த ‘தாய் கதாநாயகி’ விருதுத் திட்டத்தை மீளவும் நடைமுறைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் தாய்மாருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதுடன், பொருளாதார ஊக்குவிப்புகளும் வழங்கப்படும். அதேவேளை, குழந்தைகளற்ற வாழ்க்கையை ஊக்குவிக்கும் நடைமுறைகளுக்கு எதிரான பரப்புரைகளும் அரசாங்க மட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுவில் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் போது அவர்கள் அதிக குழந்தைகளைப் பெறுவது பற்றிச் சிந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அது தவிர அரசாங்க மட்ட ஊக்குவிப்புகளும் அதனைத் துரிதப்படுத்தக் கூடும். ஆனால், அது உலகின் அனைத்து நாடுகளிலும் சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

இன்றைய உலகத்தில் செல்வம் ஒரு புறம் குவிக்கப்பட்டு வருகையில் வறுமை மறுபுறம் வாட்டி வதைக்கிறது. அத்தகைய பின்னணியில் உலகம் முழுமைக்குமான ஒரு தீர்வு சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்க முடியும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு வளப் பகிர்வை மேற்கொள்ள ஆட்சியாளர்களும், பெரும் தனவந்தர்களும் முன்வந்தால் அன்றி இந்தப் பிரச்சனை கிட்டிய எதிர்காலத்தில் தீர்வுக்கு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply