TamilsGuide

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

யாழ்ப்பாணம் மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருவதால், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ மேலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால், தீயணைப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்புடன் உலங்குவானூர்தி மூலம் தீயணைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தீ ஏற்பட்டுள்ள பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ ஜெயானந்தமூர்த்தி ரஜீவன் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment