இலங்கை சுதந்திரமடைந்த பிறகு சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது ஶ்ரீலங்கா அரச இயந்திரத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட முதலாவது பாரிய இனப்படுகொ*லையின் 70ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஒரு இனத்தின் வரலாறு அந்த இனத்து மக்களால் ஆழமாக அறியப்பட வேண்டும்; வரலாற்றை மறந்தவன் தன் வாழ்வையும் அடையாளத்தையும் இழந்தவன் ஆகிறான் என்ற உண்மையை உணர்த்தும் வரலாற்றுப் பின்னணி இது.
1949 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவினால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் (அம்பாறை கிராமத்தில்) 'கல்லோயா அபிவிருத்தித் திட்டம்' முன்னெடுக்கப்பட்டு, அது இங்கினியாகலை அணைக்கட்டு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. 1948 முதல் 1961 வரை 'அம்பாறை' என்ற தனி நிர்வாக மாவட்டம் இருக்கவில்லை; அது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 1960 மார்ச் 19 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 'அம்பாறை' என்ற புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, 1961 ஏப்ரல் 10 அன்றுதான் அது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் இதனுடன் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டம் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்தபோது எந்தவொரு தமிழ் அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்த காலப்பகுதியில், 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து, கொழும்பு நாடாளுமன்றத்திற்கு முன்னாலுள்ள காலிமுகத்திடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. இதன் மீது சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையே, உரிமைப் போராட்டக் களத்தில் தமிழர்கள் சிந்திய முதல் இரத்தமாக வரலாற்றில் பதிவானது.
காலிமுகத்திடல் வன்முறையைத் தொடர்ந்து, தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான தமிழ் மக்களின் அமைதிப் போராட்டங்களை நசுக்க, கிழக்கு மாகாணத்தின் கல்லோயா மற்றும் இங்கினியாகலை பகுதிகளில் திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. 1956 யூன் 11 திங்கள்கிழமை தொடங்கிய இந்த வன்முறை, யூன் 16 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நீடித்தது. உள்ளூர் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்க, சிங்களக் காடையர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழ் மக்களின் குடியேற்றங்களை நோக்கிச் சென்று கொடூரத் தாக்குதல்களை நடத்தினர். குறிப்பாக, இங்கினியாகலை குடியேற்றத் திட்டப் பகுதியிலும், அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர்கள் வன்முறைகளை எதிர்கொண்ட வேளையில், தற்காப்புக்காகத் திருப்பி அடித்த வரலாற்று நிகழ்வும் இதே காலப்பகுதியில் நிகழ்ந்தது. 1956 யூன் 13 புதன்கிழமை அன்று துறைநீலாவணை கிராமத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற சிங்களக் காடையர்கள் மற்றும் இராணுவத்தினரை நோக்கி, அக்கிராமத்துத் தமிழ் மக்கள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் வன்முறையாளர்கள் தரப்பில் இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதுவே, தாயக மண்ணில் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நிகழ்த்திய முதலாவது தற்காப்புத் தாக்குதலாகும்.
1956 யூன் 11 இல் கல்லோயாவில் தொடங்கிய இந்த இனவழிப்பு, 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை தொடர்ந்தது. 2009 இறுதிப் போரின்போது மட்டும் 1,46,679 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்கள் வழியே வெளிப்படுத்திய போதிலும், இன்றுவரை சர்வதேசத்தினால் இக்கொலைகள் அங்கீகரிக்கப்படவே இல்லை.
ஆயுதப்போர் மௌனித்த கடந்த 17 ஆண்டுகாலமாக, நேரடிப் படுகொலைகள் நிகழாவிட்டாலும், தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பண்பாட்டுச் சிதைப்பு என *கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Structural Genocide)* இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எழுபது ஆண்டுகளைக் கடந்தும் நீதிக்காகத் தொடரும் இந்த வரலாற்றுப் பதிவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நமது கடமையாகும்.
அரியநேந்திரன்


