கமல் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆருக்கு பயந்து பெயர் மாற்றப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?. அதன் பின்னால் சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது. என்ன படம்..? ஏன் பெயர் மாற்றம்? என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு உருவான படத்துக்கு ‘மீண்டும் சூர்யோதயம்’ என தலைப்பிடப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவானது. ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எம்ஜி.ஆர் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியடைந்து, எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 97 நகராட்சிகளில் அதிமுகவுக்கு 11 நகராட்சிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. திமுக 64 நகராட்சிகளை கைப்பற்றியது.இந்த நேரத்தில் மீண்டும் சூர்யோதயம் என்ற பெயரில் படத்தை வெளியிட்டு, உதயசூரியனின் வெற்றியை சொல்கிறார்கள் போல என்று எம்ஜி.ஆர் நினைத்துவிட்டால் என்னாவது? அவர் கோபப்பட்டால் என்னாகும் என்பது திரைத்துறையில் இருக்கும் கமலுக்கும், ஸ்ரீதருக்கும் நன்றாகவே தெரியும். அதனால், அவசர அவ
சரமாக ‘மீண்டும் சூர்யோதயம்’ பெயரை ‘நானும் ஒரு தொழிலாளி’ என்று மாற்றினர்.
இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு பிளாஷ்பேக் உண்டு. இயக்குநர் ஸ்ரீதர் 1965 ல் எம்ஜிஆரை வைத்து, நானும் ஒரு தொழிலாளி என்ற படத்தைத் தொடங்கினார். லதா நாயகி. சில நாள் படப்பிடிப்புக்குப் பின் அந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னாளில் 1974ல் உரிமைக்குரல் என பெயர் மாற்றம் செய்து இயக்கினார் ஸ்ரீதர். மீண்டும் சூர்யோதயம் என்று பெயர் வைத்ததற்கு பிராயச்சித்தமாக, எம்ஜிஆரை குளிர்விக்க, அவரை வைத்துத் தொடங்கி, கைவிட்ட ‘நானும் ஒரு தொழிலாளி’ படத்தின் பெயரை வைத்தார் ஸ்ரீதர்.அப்படி மீண்டும் சூர்யோதயம், எம்ஜி ஆர் கோபத்துக்குப் பயந்து நானும் ஒரு தொழிலாளியாக வெளிவந்தது. படம் வெளியானது மே 1 தொழிலாளர் தினம் என்பதால், படத்தின் பெயரும் பொருத்தமாக அமைந்தது. ‘நானும் ஒரு தொழிலாளி’ படத்தில் கமலுடன் அம்பிகா, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார்.
Manohar Ranjith


