• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சௌகார் ஜானகி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

சினிமா

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சௌகார் ஜானகியின் வயது 94. இன்று சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சௌகார் ஜானகி காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.

Leave a Reply