• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில்

இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை முதலே கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாது, மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்ததனை அவதானிக்க முடிந்தது.

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. 

பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

Leave a Reply