• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 73 தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் புதிய நிர்வாகிகள், அண்மையில் நடைபெற்ற தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர்.

பேரவையின் புதிய தலைவராக திரு. எழிலன் இராமராஜன், துணைத் தலைவராக திரு. கிங்ஸ்லி சாமுவேல், செயலாளராக திரு. வள்ளிகண்ணன் மருதப்பன், பொருளாளராக திரு. ஜான் பிரிட்டோ, இணைச் செயலாளராக திருமதி பிரவீணா வரதராஜன் மற்றும் உதவிப் பொருளாளராக திருமதி ஜான்சிராணி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

அலுவல்வழி உறுப்பினராக திரு. விஜய் மணிவேல், இயக்குநர்களாக திருமதி சுபா சுந்தரலிங்கம், திரு. கதிர்வேல் குமாரராஜா, திரு. ராஜேஷ் சேசுராஜ் மற்றும் திருமதி சுபா காரைக்குடி, ஆகியோரும் இளையோர் உறுப்பினர்களாக செல்வி அத்விகா சச்சிதானந்தன் மற்றும் செல்வன் குகன் சிவகுமார் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.

“வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களை மேலும் வலுவாக ஒருங்கிணைத்து, இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் புதுமையான முயற்சிகளின் மூலம் பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே எங்களின் நோக்கமாகும்,” என்று பேரவைத் தலைவர் திரு. எழிலன் இராமராஜன் தெரிவித்தார்.

மேலும், FeTNA பேரவையின் 40-ஆவது தமிழ் விழா, 2027-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் நடைபெறவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைய தலைமுறையினர் பங்கேற்கும் வகையில் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், FiTEN எனப்படும் FeTNA சர்வதேசத் தமிழ் தொழில்முனைவோர் மாநாட்டை, 2027 ஜனவரி மாதம் சென்னையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். உலகத் தமிழ்த் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முக்கியத் தளமாக இம்மாநாடு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தகவல்களுக்கு:
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
www.fetna.org
 

Leave a Reply