அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் - ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு
மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் துணைப் பேச்சாளர், "இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், இந்த மோதல் ஒரு பெரிய போராக விரிவடையும் என்று பொதுச்செயலாளர் நீண்ட காலமாகவே கவலை கொண்டிருந்தார்.
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
தற்போது அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் எந்த விதத்திலும் நேர்மறையானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதில் பொதுச்செயலாளர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைப் பயன்படுத்தி, தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






















