• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனநாயகன் வெற்றிக்கு விஜய்யின் மேஜிக்கே காரணம் - தயாரிப்பாளர் கே.வெங்கட் நாராயணா பேட்டி

சினிமா

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 23ஆம் தேதி அன்று 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் சினிமாப் பயணத்தில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.அனைத்துத் தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் வெற்றி குறித்து, அதன் தயாரிப்பாளரான 'கேவிஎன் புரொடக்ஷன்ஸ்' உரிமையாளர் 'கே.வெங்கட் நாராயணா' தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இப்படத்தை உருவாக்குவது எங்களுக்கு எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால், எதிர்பாராத சில காரணங்களால் பல இன்னல்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தாமதம், ஏப்ரல் மாதத்தில் முழு படமும் இணையதளங்களில் கசிந்த பைரசி பிரச்சனை என அடுக்கடுக்கான சவால்கள் எங்களுக்கு எழுந்தன.

சான்றிதழ் கிடைத்த பிறகு, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை ஒன்றிணைத்து சரியான நாளில் படத்தை ரிலீஸ் செய்வதே எங்கள் ஒரே இலக்காக இருந்தது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது என்றார்.

முன்னதாக, இயக்குநர் எச்.வினோத்பேட்டி அளிக்கையில், "இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் அளித்தது பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை 'U/A' சான்றிதழ் கிடைத்திருந்தால், குடும்பங்கள் திரளாக வந்து இப்படத்தின் வசூல் சாதனையை யாராலும் தடுக்க முடியாத அளவிற்குப் பெருக்கியிருக்கும்" என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

பொங்கல் பண்டிகை அல்லது தேர்தல் விடுமுறை நேரத்தில் ரிலீஸாகியிருந்தால் வசூல் இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட தயாரிப்பாளர், தற்போதைய சூழலிலும் படம் அடைந்துள்ள வெற்றிக்கு 'விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும், அவரது மேஜிக் மற்றும் உணர்வுப்பூர்வமான இணைப்புமே காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால், அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் எமோஷனல் பிணைப்பும் உருவாகியுள்ளது.
 

Leave a Reply