• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எஸ்.ஜானகி ஏன் செக்சியாகப் பாடுகிறார்?

சினிமா

'ஜானகி விரசமாகப் பாடுகிறார்' என்று சொல்வதைக் கேட்டால், 'ஏன்? இவர்கள் எல்லாம் அந்த விரச ஒலிகளை எழுப்பாமல்தான் பிள்ளை பெற்றுக் கொண்டார்களா?' என்று சிரிப்புச் சிரிப்பாக வரும். அந்தரங்கமான அந்த முக்கல் முனகல்கள் மானுடப் பொதுமொழியின் சொற்களஞ்சியத்தில் மிக முக்கியமானவையல்லவா? அந்தச் சொற்களுக்குப் பின்னர்தானே உலகின் மற்ற அத்தனை மொழிகளும் தோன்றியிருக்கின்றன? அந்தச் சொற்கள் இல்லாமல் இந்த உலகில் மனிதர்கள்தான் தோன்றமுடியுமா? என்றால், சிக்கல் எங்கே இருக்கிறது? யாரிடத்தில் இருக்கிறது? கண்டிப்பாக அது எஸ்.ஜானகியிடத்தில் கிடையாது!
இந்தியச் சமூகத்தில் அந்தரங்கத்தை அந்தரங்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவே கிடையாது. காமக்கலையைக் கற்சிலைகளாக்கி கஜூரஹோ கோவில் முழுவதும் நிறைப்பது ஒருபுறம் என்றால்,   பாலியல் தொடர்பான சிற்பங்கள் ஒன்றையாவதும் கோபுரத்தில் வைத்தேயாகவேண்டும் என்ற நம்பிக்கை கிராமப்புறக் கோவில்கள்வரை ஆழமாக ஊடுருவியிருக்கிறது. தேர்த்தட்டுக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். விவரமறிந்த விடலைகளின் அந்தக்கால மஞ்சள் பத்திரிகைகள் அவை!
இந்த அழகில்தான், இவர்கள் சினிமாவையும் அணுகினார்கள். மல்டிப்லெக்ஸ்கள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்திருக்கும் பெரியவர்கள் சினிமா, குழந்தைகள் சினிமா என்ற வரைமுறைகள் எல்லாம் நமது அப்பன் பாட்டன்களுக்கு இருக்கவில்லை. மூத்தது பார்க்க இளையதைப் பெற்றெடுக்க வேண்டிய சூழலில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். ஒற்றை அறையின் இருளில்தான் மொடாப்பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டிய மோசமான பொருளாதாரச் சூழ்நிலை அவர்களுக்கிருந்தது. மற்ற குழந்தைகள் 'கண்டும் காணாமல்' பிள்ளை பெறுவது இயல்பாக இருந்ததாலோ என்னவோ, சினிமாவில் பாலியல் தொடர்பான‌ காட்சிகள் இடம்பெற்ற போதுகளில் அவற்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டார்கள். குடும்பமாகப் படத்திற்குப் போனவர்கள் குஞ்சுகுளுவான்களையும் கூட்டிப்போனார்கள். அவர்களது வயதிற்குத் தேவையேயில்லாத காதல், கல்யாணம், முதலிரவு, துரோகம், பழிவாங்கல், சண்டைகள், ஆளைக் கொல்லுதல் போன்றவற்றை ஆசைதீரக் காட்டினார்கள். மேலைநாட்டவருக்கு என்றைக்கோ வாய்த்துவிட்ட 'குழந்தைகள் சினிமா' என்னும் சமூக அக்கறை இன்னமும் நமக்கு வாய்த்துவிடவில்லை என்பதே கசப்பான உண்மை. வாய்த்திருந்தால், மழலையர் வகுப்புப் பிள்ளைகளை ஆபாசமான சினிமாப்பாடல்களுக்கு அசிங்கமான‌ நடன அசைவுகளை ஆடவைத்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? சினிமாவில் இருப்பதுதானே சினிமாப் பாட்டிலும் வரும்? அப்படித்தான், ஒரு நிலாக்காயுது நேரம் நல்ல நேரமோ, ஒரு நேத்து இராத்திரி யம்மாவோ வந்தன. சரி, சினிமாக்காரர்கள்தான் அப்படிப்பட்ட பாடல்களை எடுத்து வெளியிடுகிறார்கள் என்றால், பொதுச்சமூகத்திற்கு எங்கே போனது புத்தி? அந்தரங்கமாக அந்தப் பாடல்களைக் கேட்க அன்றைக்கு ஆளுக்கோரு டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்ளும் வசதி இல்லை என்பது உண்மைதான். ஆனால், பொதுவெளியில்‌ ஒலிக்கவிடாமலாவதும் இருந்திருக்கலாம் அல்லவா? குறைந்தபட்சம், கோவில் திருவிழாக்களில்?? 
கரகாட்டம் என்ற பெயரிலும், குறவன்குறத்தியாட்டம் என்ற பெயரிலும் ஆபாச நடனங்களைக் காசுகொடுத்து ஏற்பாடுசெய்து தாங்கள்பெற்ற கண்மணிகளுக்குக் காட்டி மகிழும் சமூகத்திடம் இதை எதிர்பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அதனால்தான், பெரியவர்களுக்கான சினிமாவையும், பெரியவர்களுக்கான சினிமாப் பாடல்களையும் கொஞ்சம்கூடப் பொறுப்பேயில்லாமல் தங்களது குஞ்சுகுளுவான்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சிஐடி சகுந்தலா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா, சில்க்ஸ்மிதா, டிஸ்கோ ஷாந்தி போன்றவர்களிடமிருந்த அபாயகரமான வளைவு நெளிவுகளில் தங்களது கண்களை ஓடவிட்டதுமட்டுமல்லாமல் தங்களது குழந்தைகளது கண்களையும் மேயவிட்டார்கள்.
கிராமத்து மக்கள்தான் இப்படி என்று யாரும் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ரொம்பவும் ஆச்சாரமானவர்கள், கட்டுப்பெட்டிகள், கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்ட வகுப்பினரது நிலைமையும்கூட இதே தரத்திலதான் இருந்தது. என்ன... பரதநாட்டியம் என்ற‌ பெயரில் பண்பாட்டுமுலாம் பூசிக்கொண்டு பதவர்ணங்களையும், ஜாவளிகளையும் தங்கள் பெண்குழந்தைகளை ஆடவைத்து அழகுபார்த்துக் கொண்டிருந்தார்கள். காமரசம் சொட்டச்சொட்ட ஆடப்படுபவை மேற்சொன்ன வர்ணங்களும், ஜாவளிகளும். கடவுளின் மீது ஏற்றி ஆடப்படுவதனாலேயே அவை ஆபாசமற்றவை என்று ஆகிவிடாது. அவற்றின் நீட்சிதான் இன்றைக்கு நமது குழந்தைகள் பள்ளி ஆண்டுவிழாக்களில் ஆடிக்கொண்டிருக்கும் 'வாடி வாடி வாடி வாடி கைபாடாத சிடி' வகை அற்புத நடனங்கள்.
இப்பேர்ப்பட்ட பொறுப்பற்ற சமூகமாக நாம் இருந்துகொண்டு ஒரு எஸ்.ஜானகியைக் கைகாட்டி, 'ஆபாசமான பாடல்களைப் பாடியவர்' என்று குற்றம் சுமத்துவது எப்பேர்ப்பட்ட முரண்! அதற்கு எஸ்.ஜானகி மட்டுமா காரணம்? நாம் எல்லோரும்தானே காரணம்? இங்கே நாம் ஒன்றை மறந்துவிடவே கூடாது. பாலியலைக் கொண்டாடாமல் ஒரு சமூகம் இருக்கவே முடியாது. 'என் தேகம் அமுதம்', வகைப் பாடல்கள் கண்டிப்பாகத் தேவைதான். பள்ளிக்கூடம் போகலாமா?, நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால, மீண்டும் மீண்டும் வா, பொன்மேனி உருகுதே, விழிகள் மேடையாம், சங்கத்தில் பாடாத கவிதை, ஏய் மனம் நில்லுனா நிக்காதடி, அடிக்கிது குளிரு, உறக்கக் கத்துது கோழி போன்ற பாடல்கள் இல்லாமல் அது முடியாது. ஆனால், அவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் வைத்துக்கொள்ள‌ வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும்படி வைப்பது வன்முறையாகவே கொள்ளப்படும் என்ற‌ புரிதல் வேண்டும். 
ஒருவேளை, இந்தச் சினிமாப் பாடல்கள் எல்லாம் பொதுவெளியில் ஒலிக்கவிடப்படுபவை என்பதை அறியாதவரா எஸ்.ஜானகி? ஒரு சுசீலாவோ, வாணி ஜெயராமோ, சித்ராவோ இதை அறிந்திருந்ததால்தானே அப்படியாப்பட்ட பாடல்களைப் பாடுவதைத் தவிர்த்து வந்தார்கள்? என்ற கேள்வி எழுவதைத் தவிரக்க முடியாது. ஆமாம். சுசீலாவோ, வாணியோ, ஷைலஜாவோ, சித்ராவோ அப்படிப்பட்ட பாடல்களைப் பாடியதில்லைதான். ஆனால், அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அப்படிப்பட்ட பாடல்களை அவர்கள் பாடாமல் இருந்ததில்லை. வாய்ப்புக்கிடைத்த பொழுது முயன்றிருக்கிறார்கள். என்னடா இவன்? எங்கள் சுசீலா மீது, எங்கள் வாணி மீது, எங்கள் சித்ரா மீதெல்லாம் இப்படிப் பழிபோடுகிறானே? என்று தோன்றுகிறதா? தோன்றட்டும். தப்பில்லை. ஆனால், உண்மை என்ற‌ ஒன்று இருக்கிறதல்லவா? அதை ஊரறியச் சொல்லித்தானே யாகவேண்டும்?
குறத்திமகன் படத்தில், 'கொறத்தி வாடீ யேங் குப்பி' பாடலில், குறிப்பாகப் பாடலின் இறுதியில் 'யாஹ்ன் யாஹ்ன்' என்று பாடுகிறாரே சுசீலா? அது என்ன பக்தி ஆலாபனையா? கலவிக்கான அனுமதியைத்தானே அப்படித் தருகிறார்? நிலவு நேரம் இரவுக் காலம் (அன்னை ஓர் ஆலயம்), மல்லிகைப்பூ கட்டிலிலே (என்னப் பெத்த ராசா) போன்ற‌வை அசலான க்ளப் மற்றும் பாலுணர்வுப் பாடல்கள். இவற்றைப் பி.சுசீலாதான் பாடியிருக்கிறார். எண்ணியிருந்தது ஈடேற (அந்த ஏழு நாட்கள்), வாடகை வீடிது வாசனை பூவிது (பாடாத தேனீக்கள்), எது சுகம் சுகம் அது (வண்டிச்சோலை சின்ராசு) போன்ற‌ எரோட்டிக்கான பாடல்களை வாணிஜெயராமும்தான் பாடியிருக்கிறார். சாமக்கோழி கூவுதம்மா (பொண்ணு ஊருக்குப் புதுசு), வா வா வாத்தியாரே வா (முந்தானை முடிச்சு) போன்றவற்றை ஷைலஜாவும் பாடியிருக்கிறார். அப்படியென்றால் சித்ரா மட்டும் சளைத்தவரா என்ன? இத்தனைக்கும் இவர்களைவிட வயதில் சிறியவர் வேறு! விடுவாரா? பட்டு வண்ண ரோஜா (ஜீவா), சிவராத்திரி தூக்கம் போச்சு ஹோய் (மைக்கேல் மதன காமராஜன்) போன்ற பாடல்களில் காமராசத்தைச் சொட்டவிட அவரும் தயங்கவில்லை. ஆனால், இந்தப் பாடல்களில் ஒரு சிலவற்றைத் தவிர‌ மற்றவை எதுவும் உங்களது நினைவில் இருக்காது; இருந்தாலும், எரோட்டிக் பாடல்கள் என்ற‌ உணர்வைத் தராது. அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு.
எண்ணிப்பாருங்கள், அந்தக் காலத்தில், க்ளப் டான்சுக்கான பாடல், காமரசம் சொட்டும் பாடல் என்றாலே 'கூப்பிடு எல்.ஆர்.ஈஸ்வரியை' என்பதுதான் நிலைமையாக இருந்தது. சுசீலா என்றால் மெலடி. மற்ற அதிரிபுதிரி வகைகளுக்கு எல்.ஆர்.ஈஸ்வரி என்றே முத்திரை குத்தி வைத்திருந்தார்கள்.‌ உண்மையில், இதற்குக் காரணம், அந்தப் பாடகர்கள் அல்ல; அவர்களது குடும்பச் சூழலே மிக முக்கியமான காரணமாக இருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி சுயம்பு. அவரைக் கட்டுப்படுத்த ஆளே கிடையாது. தனக்கு வாய்த்த எந்தப் பாடலைப் பாடவேண்டும், பாடக்கூடாது என்ற‌ முடிவுகளை எல்லாம் அவரே எடுத்தார். ஆனால், சுசீலாவிற்கு அப்படிப்பட்ட சுதந்திரமான வாய்ப்பு இருந்ததாகத் தெரியவில்லை. 
நிறைய நேரங்களில் நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். அந்தக் காலத்தில், பொதுவெளியில் பிரபலமாக இருந்த பெண்கள் எல்லோருமே இழுத்துப் போர்த்துக் கொண்டுதான் வலம்வருவார்கள். திரைப்படங்களில் அப்படியிப்படி நடிக்கும் பெண் நடிகர்களே கூடப் பொதுவிழாக்களில் இழுத்துப் போர்த்துக்கொண்டுதான் வருவார்கள். பாடகர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, வாணிஜெயராம் இப்படி. அதற்குக் காரணம் சமூக அழுத்தம்தானே தவிர, அவர்களது தனிப்பட்ட தேர்வு அல்ல. ஒருபக்கம் குடும்பத்திலிருந்த ஆண்கள் நிர்பந்தித்தார்கள் என்றால், மறுபக்கத்தில் உடன்பணிபுரியும் ஆண்கள் இழுத்துப் போர்த்தலை இன்றியமையாததாக்கினார்கள். அதிலும், பின்னணிபாடும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. ஆண்கள்மட்டுமே நிறைந்த இடங்களாகத்தான் பாடல்பதிவுக் கூடங்கள் இருந்தன. அங்கேதான் ஒரே ஒரு ஒற்றைப் பெண்ணாக‌ நின்றுகொண்டு ஒரு பி.லீலாவோ, ஜிக்கியோ, ஜமுனாராணியோ, சுசீலாவோ, ஜானகியோ, எல்.ஆர்.ஈஸ்வரியோ, வாணியோ பாடவேண்டியிருந்தது.
உடலை மறைக்கும் உடைக்கே இத்தனை மெனக்கெடவேண்டும் என்றால், மிகவும் அந்தரங்கமான உணர்வான பாலியல் உணர்வை வெளிக்காட்டும் பாடல்களை எப்படி இவர்கள் பாடுவது? பாடினால், குடும்பமும், சூழ்ந்திருக்கும் ஆண் சமூகமும் சும்மா விட்டுவிடுமா? அதனால்தான், சுசீலாவோ, வாணியோ, சித்ராவோ அதற்கு முயன்றதில்லை. ஈஸ்வரியைப் பற்றி முன்னமே சொல்லியிருக்கிறேன். கட்டற்ற காட்டாறு அது. அப்புறம் எப்படி ஜானகி மட்டும் காமரசம் கொப்பளிக்கும் பாடல்களைக் கட்டற்றுப் பாடிக்கொண்டிருந்தார்? இத்தனைக்கும் அவரும் அதே கட்டுப்பெட்டியான சமூகத்திலிருந்து வந்தவர்தான்; கல்யாணமானவர்தான். கூடவே, கணவரின் துணையில்லாமல் ரெக்கார்டிங்குகளுக்கு வராதவர்தான்! அப்புறம் எப்படி அது சாத்தியமானது?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். ஆனால், எஸ்.ஜானகியின் வெற்றிக்குப் பின்னால்  அவரது கணவரான‌ திரு.இராம்பிரசாத் அவர்கள்தான் மலைபோல நின்றார். தனது மருமகள்‌ ஒரு அபூர்வமான இசைப்பொக்கிஷம், அவள், உலகப் பிரபல்யத்திற்குத் தகுதியானவள் என்றுணர்ந்து ஏவிஎம்மிற்குக் கடிதம் எழுதி ஆடிஷனுக்கு அனுப்பிவைத்த ஃபன் டாக்டர் சந்திரசேகரம் அவர்களைப் போலவே அவரது மகனான இராம்பிரசாத்தும், மனைவியின் அருமையறிந்த மாமனிதராக இருந்தார். எஸ்.ஜானகிக்குத் தீவிரமான வீசிங் ட்ரபுள் இருந்தது. பின்னாட்களில் ஆஸ்த்மாவாகவும் முற்றி அது தொல்லை தந்தது. அவற்றின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆங்கில மருந்துகளுடன், சித்தா, ஆயுர்வேதா மருந்துகளையும் நாள்தோறும் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த மருந்துகளைத் தாங்கிய முதலுதவிப்பெட்டியுடன் ஜானகியின் ஒவ்வொரு ஒலிப்பதிவிற்கும் நிழல்போல தொடர்ந்தவர் இராம் பிரசாத்.
பாடல்பதிவுகளின் பொழுது தனது மனைவி மற்ற‌ ஆண்களுடன் எப்படிப் பழகுகிறாள் என்று வேவுபார்ப்பதற்காக ஒலிப்பதிவுக்கூடத்திற்குப் போன மற்ற பெண் பாடகர்களின் கணவர்களைப் போன்றவரல்ல ராம்பிரசாத். ஜானகியின்  உற்ற‌ தோழனாக இருந்தவர். அவருக்கு உதவுவதற்காகவே ஒவ்வொரு பாடல்பதிவிற்கும் உடன்சென்றவர். அங்கேயும்கூட மனைவிக்குத் தேவையான‌ நேரங்களின் போது மட்டுமே உடனிருந்தார். மற்ற‌ நேரங்களில், அங்கே உண்டாகியிருந்த நட்பு வட்டங்களுடன் அளவளாவிக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால்தானோ என்னவோ, சேலையை இழுத்துப் போர்த்துக்கொண்டு வலம்வரும் அவசியம் ஜானகிக்கு இல்லாது போனது.
நமது கூட்டு மனச்சாட்சி சற்றே விசித்திரமானது! தனது மகள்களைக் குலமகள், விலைமகள் என்று பிரித்து வைப்பதும் அதுதான். அவர்களில் முன்னவர்களை வெளிச்சத்தில் கொண்டாடுவதும் அதுதான். பின்னவர்களை இருட்டில் போற்றித் துதித்துவிட்டு வெளிச்சத்தில் தூற்றுவதும் அதுதான். அதே அளவுகோலைத்தான் பின்னணி பாடவந்த பெண்குரல்களுக்கும் அது நீட்டித்துவைத்தது. சுசீலா செக்சியாகப் பாடக்கூடாது என்று விரும்பிய‌ அதே சமூகம்தான் எல்.ஆர்.ஈஸ்வரியின் காபரே நம்பர்களுக்காகச் சில்லறைகளை அள்ளிவீசியது! அதாவது, குடும்பப்பாங்கான குரல் என்று தன்னால் முத்திரை குத்தப்பட்ட ஒருவரது குரலில் காமரசம் கொப்பளிப்பதை அது விரும்பவேயில்லை; ஏற்றுக்கொள்ளவேயில்லை. தான் கற்பனை செய்து வைத்திருந்தபடி, இழுத்துப் போர்த்துக்கொண்டு இன்னிசை எழுப்பும் கட்டுப்பெட்டிக் குரலாகவே அது கடைசிவரையிலும் நீடிக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. தன்னால், செக்சியான குரல் என்று முத்திரை குத்தப்பட்ட ஈஸ்வரியின் குரலில் எது வெளிப்பட்டாலும் அதைக் கொண்டாடித் தீர்த்தது. ஆனால், அந்தக் கட்டுப்பெட்டிப் பாடகர்கள் தங்களை அப்படிக் குறுக்கிக் கொண்டதில்லை. தங்களுக்கான விடுதலை வரும்வரை காத்திருந்தார்கள் என்பதே உண்மை. வயோதிகம் வரும்வரை காத்திருந்தார்கள் அல்லது நந்தியைப் போல குறுக்கேகிடந்த கணவன் வாழ்வைவிட்டு விலகும் வரை காத்திருந்தார்கள். விடுதலை கிடைத்ததும் நானும் செக்சியாகப் பாடுகிறேன் பார் என்று கோதாவில் குதிக்கத்தான் செய்தார்கள். ஆனால், அந்தப் பாடல்கள் அத்தனை நிலைக்கவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. 
ஜானகியளவிற்கு மற்ற பெண் பாடகர்களின் காமரசப் பாடல்கள் நில்லாமல் போனதற்குக் காரணம், அவர்களால் அவர் அளவிற்கு அதைப் பாடமுடியாமல் போனதே. நான் மேலே சொன்ன பாடகர்களின் மேற்படி பாடல்கள் பலவும் நமது நினைவில் நில்லாமல் போனதற்குக் காரணம் அந்தப் பாடல்களை, அவர்களால், ஜானகியைப் போல காமரசம் சொட்டச்சொட்டப் பாடமுடியவில்லை என்பதே என்றால் அதில் சற்றும் மிகையில்லை. ஏதோ ஒரு மனத்தடை, ஏதோவொரு திறமைக்குறைவு அவர்களிடம் இருந்தது. எத்தனை முயன்றும் அவர்களால், எஸ்.ஜானகியைப் போல தமது குரலின்வழி காமரசத்தைப் பரிமாற‌ முடிந்ததேயில்லை. காபரே நம்பர்களுக்குப் புகழ்பெற்ற வடயிந்தியப் பாடகரான ஆஷா போன்ஸ்லேவால்கூட, ஜானகியளவிற்குப் பரிமளிக்க முடிந்ததில்லை. அவர் பாடிய, 'பொன்மேனி உருகுதே' பாடலின் இந்தி வடிவமான‌ 'ஓ பபுவா ஓ மெஹூவா' வைக் கேட்டுப்பாருங்கள் நான் சொல்வது விளங்கும். 
அப்புறம், கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடலைப் பாடும்பொழுது பாடகரிடம் வெளிப்படும் உடல்மொழி. சில பாடகர்கள் எல்லாம் துள்ளலான பாடலைப் பாடும்பொழுது மகிழ்ச்சியில் சேர்கள் பெஞ்ச்சுகள் மீதெல்லாம் ஏறித் துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவார்களாம்! வடயிந்தியப் பாடகர் கிஷோர்குமார் அப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டிஎம்எஸ் பாடினார் என்றால், குரலில் வெளிப்படும் பாவங்கள் அனைத்தும் அவரது உடலிலும் வெளிப்படும். குறிப்பாக முகத்திலும்! பெண் பாடகர்களும் இதற்கு விதிவிலக்கள் அல்லர். ஜிக்கி, ஜமுனாராணி, சுசீலா, ஈஸ்வரி, ஸ்வர்ணலதா என்று எல்லோரது முகத்திலும் அவர்கள் பாடும் பாடலின் பாவங்கள் அவர்களது முகத்திலும், உடலிலும் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். அப்படி பாவங்கள் வெளிப்படுவது ஒன்றும் குற்றமில்லைதான். 'கோழி குருடாக இருந்தால் என்ன? குழம்பு ருசியாக இருந்தால் சரி' என்னும் ஊரில், ஒருவர் அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு பாடினால்தான் என்ன? அல்லது ஆடாமல் அசையாமல், அலுங்காமல் குலுங்காமல், சித்திரமொன்று வாயசைப்பதைப் போல  முகத்தில் சலனமேயில்லாமல் ஜானகி பாடுகிறாரே அப்படிப் பாடினால்தான் என்ன? பாடல் சுவையாக இருந்தால் போதாதா?
ஆனால், மற்ற பாடகர்களுக்கு, அவர்களது குரலில் குறிப்பிட்ட பாவம் வரவேண்டும் என்றால், அவர்களது முகத்திலும் அதே குறிப்பிட்ட பாவமும் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் முடியாது. சரி, அதிலென்ன குற்றம்? ஒன்றுமில்லைதான். அன்பு, கோபம், வீரம், அழுகை, நகைச்சுவை, காதல் போன்ற உணர்ச்சிகளைக் குரலில் கொணர்வதற்காக முகத்திலும் அந்த பாவங்களைக் கொணர்வதில் பிரச்சினை இல்லைதான். ஆனால் காமத்தை? காமரசத்தைக் குரலில் கொண்டுவருவதற்காக‌ ஒருவர் தனது முகத்திலும் காம உணர்வுக்களை வெளிப்படுத்தினால்? அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்துவிட்டால்?
நமது பெண்பாடகர்கள் அனைவரும் உண்மையிலேயே போற்றுதலுக்குரியவர்கள் என்றால் அது மிகையில்லை. ஆணாதிக்கச் சமூகத்தின் அத்தனை அழுத்தங்களுக்குள்ளும், அடக்குமுறைகளுக்குள்ளும் நின்றுகொண்டுதான் இத்தனை மகத்தான சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறார்கள். ஒருநூறு ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாக நின்றுகொண்டுதான் ஒரு சுசீலாவோ, ஜானகியோ இவ்வளவு பெரிய உயரங்களை அடைந்திருக்கிறார்கள்.
காமரசப்பாடல்களில் சுசீலாவைவிட‌ ஜானகி உயர்ந்து நிற்பதற்கு, இயல்பாகவே உணர்ச்சிகரமாக எதையும் பாடிவிடும் அவரது அபூர்வமான திறமை ஒரு காரணம் என்றால், பாடும்பொழுது பாடலின் எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாடும் அந்த அபாரமான திறமை இன்னொரு காரணம். நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் பாடலில், தான் வெளிப்படுத்தும் காமரசத்திற்கேற்பத் தனது முகத்திலும் காம உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார் என்றால் அது எத்தனை நகைப்பை உருவாக்கியிருக்கும்?! எண்ணிப்பாருங்கள். டிராக் வசதியோ, பாடகருக்கான தனி அறையோ இல்லாத அந்தக் காலகட்டத்தில், கருவி இசைக்கலைஞர்கள், இசை நடத்துனர், இசையமைப்பாளர், உடன் பாடுபவர், குழுப்பாடகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர், அவரது உதவியாளர்கள், நடிகர்கள், இசைக்கூட தொழில்நுட்பநர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று அத்தனை பேரும் ஆண்களாகவே நிறைந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் அப்படியெல்லாம் முகத்தில் காமரசத்தை வழியவிட்டுக் கொண்டு பாட முடியுமா?
ஒலிப்பதிவுக் கூடத்திற்கே இத்தனை கவனம் தேவை என்றால், பல்லாயிரம் இரசிகர்கள் நிறைந்த சபைக்கு? ஜானகி கவலைப்பட்டதேயில்லை. தனது பொன்விழாவை ஈரோட்டில் கொண்டாடிய பொழுதுகூட, அத்தனை ஆயிரம் மக்களின் முன்பாக நின்றுகொண்டு மலேசியா வாசுதேவனுடன் இணைந்து, 'நிலாக் காயுது' பாடினார்! ஒரிஜினல் பாடலின் எந்தவொரு பாவத்திற்கும் குறைவில்லாமல்!! விரகதாபத்தைப் பெண் பாடும்பொழுது குறைப்பட்டுக் கொள்ளும் அதே சமூகம், ஆண் பாடும்பொழுது எதுவுமே சொல்வதில்லை! எஸ்.ஜானகியென்ன எப்போதும் தனியாகவா காமம் பாடிக்கொண்டிருந்தார்? எஸ்பிபியோ, மலேசியா வாசுதேவனோ, மனோவோ, ஜெயச்சந்திரனோ, இளையராஜாவோ, டாக்டர் கல்யாணோ அவருடன் இணைந்து பாடிக்கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களையெல்லாம் மறந்தும்கூட யாரும், 'ஆபாசமாகப் பாடுகிறார்', என்று குற்றம் சொல்வதில்லையே ஏன்! 
ஆனால், ஜானகி எதைப்பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டதேயில்லை. தனக்கு அமைந்த அத்தனை சாதகங்களையும் தனது வித்தையின் மேன்மைக்காகவே பயன்படுத்திக்கொண்டார். ஆணுக்கு இருக்கும் அந்தச் சுதந்திரவெளி பெண்ணுக்கும் சொந்தம் என்பதை எப்போதும் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். 

- சத்தியப்பெருமாள் பாலுசாமி
16.07.2026
 

Leave a Reply