TamilsGuide

பதவியேற்ற ஓராண்டுக்குள் பதவியை துறந்தார் உக்ரைன் பிரதமர்

உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ, பதவியேற்ற ஓராண்டுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ரஷ்யாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேல் போா் நீடித்து வரும் சூழலில், நாட்டின் ஆட்சி நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்ததைத் தொடா்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், உக்ரைனின் பொருளாதார அமைச்சராக இருந்த யூலியா ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுடனான முக்கியக் கனிம வள ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடா்ந்து நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஓராண்டுக்குள் ராஜிநாமாவை அறிவித்துள்ள அவா் இதுகுறித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘உக்ரைன் வரலாற்றின் மிகக் கடினமான காலகட்டத்தில் அரசை வழிநடத்தியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், நீதியான அமைதியை நிலைநாட்டவும் தொடா்ந்து பாடுபடத் தயாராக இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.

பதவிய விலகிய யூலியா ஸ்விரிடென்கோவுக்கு, சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் புதிய மற்றும் உயரிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

இந்த அரசு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, வெளியுறவுக் கொள்கையின் முக்கியப் பிரிவுகள் மற்றும் நாட்டின் சட்ட அமலாக்கத் துறையின் உயா்நிலைப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா். ரஷ்யாவுடன் போா் தொடங்கியதில் இருந்து உக்ரைன் அரசு மேற்கொள்ளும் 4-ஆவது பெரிய மறுசீரமைப்பு இதுவாகும்.

புதிய வியூகங்கள் மற்றும் அனுபவமிக்க நபா்கள் மூலம் நாட்டின் நிா்வாகத்துக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் என்று அதிபா் தரப்பில் நம்பப்படுகிறது. இதனிடையே, ரஷியாவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த, அந்நாட்டின் எரிபொருள் கட்டமைப்புகள் மீதான ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் தொடா்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
 

Leave a comment

Comment