TamilsGuide

எஸ்.ஜானகிக்கு மட்டும் என் மூளையில் 60 களில், 70 களில், 80 களில், 90 களில் என நான்கு பாகங்கள் உண்டு.

வாரத்தில் ஒரு நாளாவது இப்படி ஏதேனும் ஒரு பத்தாண்டுக்குள் போய், அங்கு காற்றில் கலந்திருந்த ஜானகியின் குரலை தேடிப் பகுத்தறிந்து கேட்பேன்.
60 க்குள் போனால் ;
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என்று தூங்கச் சொல்வார். 
இல்ல, முடியாது.  இன்னும் நாலஞசு பாட்டுக்களையாவது கேட்டுட்டுதான் தூங்குவேன் என்பேன்.
சின்னஞசிறிய வண்ணப்பறவை 
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
பொதிகை மலை உச்சியிலே
இந்த மன்றத்தில் ஓடி வரும்
பூஜைக்கு வந்த மலரே வா
குறிப்பாக, எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா பாடலில், ராஜா ராஜா ராஜா என்று அவர் உருகி வழிந்து கொஞ்சும் போது அப்படியே சொக்கி, தூங்கி விடுவேன் !
இன்னொரு நாள், 70 களுக்குள் வந்தால் ;
காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடஙகிவிடாது என்பார்.
உண்மைதாம்மா என்பேன்.
சொல்லத்தான் நினைக்கிறேன், இந்தப் பாடலுக்கு தனிப்பதிவையே எழுதியிருக்கேன்.  
முன்பு ஜானகியின் வயோதிக குரலை கிண்டலடித்து எழுதி, சத்யபெருமாளால் கொலை மிரட்டலுக்காளானதால், நிஜமாகவே பயந்து, அதைச்சரிகட்ட, அந்தப் பதிவில், ஜானகியை உச்சம் கொண்டுபோய், அதற்காக மெல்லிசை மன்னரை மெல்லச் சுரண்டி விட்டேன்.
அதற்கும் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்து, அவர் வாள் வீசியதெல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
ஆழமான இசை ரசிகனென்றால் அப்படித்தான் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டுமென்கிற பாடம் அது !
செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்றக் காற்றே
இந்தப் பாடலில் வழியும் சோகத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்.
எஸ்.பி.பி ஒரு பேட்டியில், பார் மகளே பார் படத்தில் வரும் கண்ணதாசனின் வரிகளான, 
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தின் பாடலைப் பாடி ;
இந்தப் பாடலைக் கேட்கும் போதே என் மனது உருகிவிடும்.  பின்னாளில் அந்தக் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து வரும், அல்லது அவர்களால் அந்தக் குடும்பம் பிரியும் என்பது, அந்த இசையில் தாமாக வெளிப்படும், அதை எம் எஸ் வியிடம் கேட்டதாகவும், அப்படியெல்லாம் நான் எதையும் வலிந்து திணிக்கவில்லை என்று மெல்லிசை மன்னர் சொன்னதாகவும், எஸ் பி பி விளக்கியிருப்பார்.
அதேபோல, வாலிப வயசில் துள்ளலாக அந்தப் பெண், தன்னழகை வியந்து, அதற்கேற்ப அழகான துணை வேண்டுமென ஏங்கிப் பாடினாலும், அவளுடைய அந்த அழகே அவளுக்கு வினையாகும் என்பதை அந்தப் பாடலின் பின்னணி இசை நமக்குச் சொல்லாமல் சொல்லும்.  இதனாலேயே இந்தப் பாடல் எனக்கு கொஞ்சம் வலியைத் தந்துவிட்டே போகும் !
மச்சானைப் பாத்தீங்களா, மலைவாழைத் தோப்புக்குள்ளே ... 
இந்தப் பாடலில் இருக்கும் துள்ளலை அன்று எள்ளலாக அணுகியிருக்கிறது ஒரு மேதைக் கூட்டம்.  அவர்கள் முகங்களில் கரியை அள்ளியள்ளி பூசினார் ராஜா.
இதை எப்படி ரீமிக்ஸ் செய்யாமல் விட்டிருக்கின்றனர் ?
மாதா உன் கோவிலில் ...
மனம் பாரமாகும் போதெல்லாம் இந்தப் பாடல்தான் இறக்கி வைக்கத் தோதாக இருக்கும்.
வசந்தகாலக் கோலங்கள்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா என்று ஜானகி மன்றாடும் போது, அந்த தேவனே குழைந்து விடுவான் ! 
80 க்குள் நுழைந்தால்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி.
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
விழிகள் மேடையாம்
இந்த டி ஆர் மியூசிக் என்றாலே ஜானகி குரலில் மேலும் குழைவும், இனிமையும் சேர்ந்துக் கொள்கிறது.  
நெஞ்சம் பாடும்
இந்தப் பாடல் எல்லாம் ஜானகி குரலின் உச்சம். 
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க ...
இதில் ஜானகி குரல் துடிக்கும், நடுங்கும், உதறும்.  பாடலில் நாயகி நனைவாங்க, அவங்களுக்கு ஆட்டோமெட்டிக்கா இதெல்லாம் நடக்கும்.  ஒலிப்பதிவின் போதே என்னமோ ஜானகியம்மா மேல குடம் குடமா தண்ணிய ஊத்தி விட்டாப்பல பாவம் செஞ்சு ... ஓ மை காட், டி ஆர் கிட்ட மட்டும் நீங்க என்ன இப்படி பாடுறீங்கன்னு ராஜாவே கேட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன் !
காற்றில் எந்தன் கீதம்
வெட்டி வேரு வாசம்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா 
90 க்கு வரும் போது,
நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஒட்டகத்தை கட்டிக்கோ
சின்னத் தாயவள்
என்னதான் சுகமோ நெஞ்சிலே
அடிக்குது குளிரு
ஒரு நிமிஷம்.  இந்தப் பாடலைப் போட்டாலே எங்க குடும்பம் குதூகலம் ஆகிடும்.  ரஜினி குரலுக்காக.  ச்சும்மாவே ஓட்டுவோம் 🤣
இதுல ஜானகி செஞ்சதுதான் கொடூரம்.
அவ்வளவு அழகா, இனிமையைக் கூட்டி, சிச்சுவேஷனுக்கேற்ப லைட்டா காதல்விரகத்தைத் தூவி, பாட்டை அவ்வளவு அதகளமாக்கியிருப்பார் ஜானகி.  ரஜினி பாவம் 🤣
என்னை மானமுள்ள பொண்ணு
மலரே மவுனமா ?
கூவுற குயிலு சேவலப் பாத்து படிக்குது பாட்டு.
தேவா மகுடத்தில் இருக்கும் பல அரிய வைரக்கற்களில் ஒன்று இந்தப் பாடல்.  ஒரே நேரத்தில் இரண்டு ஜாம்பவான்களுக்கும் தேவா வழங்கிய அற்புதப் பரிசு இந்தப் பாடல்.

இந்தத் தொகுப்பில் ஜானகியின் அரிய பாடல்கள் என்று ஏதுமிருக்காது.  இதெல்லாமே பல கோடி தமிழர்களால், இந்தியர்களால், இசை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்கள் மட்டுமே !
உங்களுக்கு ஜானகியின் அரிய பாடல்களைக் கேட்க நீங்கள் அணுக வேண்டிய இருவர் 
1.) சத்யபெருமாள்
2.) அருணா ராஜ்
இவர்களுடைய ஜானகியே வேறு.
தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் கலக்கிய பாடல்கள் வரை கேட்கும் அதி தீவிர ஜானகி விசிறிகள்.
ஜானகியின் மரணம் கல்யாணச் சாவுதான்.
எனக்கு அவருடைய தீவிர விசிறிகளைத்தான் ஆரத்தழுவி தேற்ற அவா.  
ஜானகியை நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது.  நாம் நீங்கிய பின்னரும் அவரிருப்பார் !
போய்ட்டு வாங்க ஜானகியம்மா, மிக்க நன்றி 🙏

 

ராஜா ராஜேந்திரன் 
 

Leave a comment

Comment