TamilsGuide

திரைப்பட மறுவெளியீடுகளில் மக்கள் திலகத்தின் படங்களே முன்னணியில் இருக்கின்றன

மக்கள் திலகம் நடிப்புத் தொழிலை விட்டு 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. மறைந்து 39 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் திரைப்பட மறுவெளியீடுகளில் மக்கள் திலகத்தின் படங்களே முன்னணியில் இருக்கின்றன.

மற்ற எந்த நடிகராக இருந்தாலும் சரி. அவர்கள் திரையுலகில் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று 49 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் இறந்து 39 ஆண்டுகள் ஆனபிறகும் இதுபோல அவர்களின் படங்கள் ..........வேண்டாம், மக்கள் திலகத்தின் படங்கள் போல அதிக அளவில் கூட வேண்டாம். ஒன்றிரண்டு படங்களாவது அவர்களது படங்கள் வருமா? என்றால் சவால் விட்டுச் சொல்லலாம். நிச்சயமாகச் சொல்லலாம். வரவே வராது. ஏனென்றால், இப்போதே அவர்களின் படங்கள் மறுவெளியீடுகள் வருவது இல்லையே? இன்னும் பல ஆண்டுகள் கழித்து எப்படி அவை தியேட்டர்களில் வெளிவரும்?

அந்தக் காலத்தில் மக்கள் திலகத்தின் படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்துவிடும். சரியாகப் போகவில்லை என்றால் லாபத்தில் குறையும். மற்றபடி அவர் படங்கள் நஷ்டம் ஏற்படுத்தாது என்பதால் எம்.ஜி. ராமச்சந்திரன் என்பதை மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்பார்கள். குறைந்தபட்ச லாபம் உத்தரவாதம் என்பதற்காக அப்படி சொல்வார்கள். ஆனால், அவர் மேக்ஸிமம் கியாரண்டி ராமச்சந்திரனாகி விட்டார்.

இப்போதும் மறுவெளியீடுகளில் மக்கள் திலகத்தின் படங்கள் மற்ற எல்லா நடிகர்களின் படங்களை விடவும், அதிக அளவில் வெளியாகி விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் தருகின்றன. அப்படி லாபம் தருவதால்தான் அவர் படங்களை அதிகமாக திரையிடுகின்றனர்.

அந்த வகையில், நமக்குத் தெரிந்த வரையில் (தெரியாமல் சிறிய ஊர்களில், கிராமங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் எத்தனை ஓடுகிறதோ?).. தெரிந்த வரையில் மறுவெளியீடுகளிலும் சக்ரவர்த்தியாகத் திகழும் மக்கள் திலகத்தின், அன்பே வா.. கோவில்பட்டி லட்சுமி அரங்கில் வெற்றி நடைபோடுகிறது. பழனி மினி ரமேஷில் ரகசிய போலீஸ் 115 உலா வருகிறார். மதுரை நத்தம் சென்ட்ரல் அரங்கில் இதயக்கனி மக்களின் இதயங்களை குளிர்விக்கிறார். காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியா அரங்கில் மாட்டுக்கார வேலன் மகிழ்விக்கிறார்.

திருச்சி பேலஸ் அரங்கில் என்றுமே நிற்காத மக்கள் திலகத்தின் ரிக்க்ஷா படுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம்தான் ஸ்ரீரங்கம் ரங்கராஜா அரங்கில் ஓடியது. அங்கிருந்து தொடர்ந்து இணைந்த இரண்டாவது வாரமாக பேலஸில் ஓடுகிறது. அது மட்டுமல்ல, இதே பேலஸ் அரங்கில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக திரையிடப்படுகிறது. இதிலிருந்து வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.(தகவல் நன்றி சகோதரர் சாமுவேல்)

திரையரங்கில் மட்டுமல்ல, இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியிலும் ரிக்க்ஷாக்காரர் வந்தார். திரையரங்குகளில் மட்டுமல்ல, தனியார் தொலைக்காட்சி சேனலிலும் மக்கள் ஆதரவோடு தொடர்ந்து வெற்றி நடைபோடுவது மக்கள் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்.

ரிக்க்ஷாக்காரன் படத்தில் க்ளைமாக்ஸ் சுருள்பட்டா சண்டைக் காட்சியை மணிக்கணக்கில் விவரிக்கலாம். சண்டையின் சிறப்பு இருக்கட்டும். எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் மனிதாபிமானமே மேலோங்கி நிற்கும்.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் 20, 25 பேர் சண்டை போடுவது போல காட்சி அமைக்குமாறு ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் மக்கள் திலகம் கேட்பாராம். கே.பி. ராமகிருஷ்ணன், ஸ்டண்ட் சங்கர் ஆகியோர் சொல்லியிருக்கின்றனர். எதற்கு என்றால், காட்சி பிரம்மாண்டமாக இருப்பதற்காக மட்டுமல்ல, சண்டைக் கலைஞர்கள் வேலை கேட்கிறார்கள். அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கும் என்று மக்கள் திலகம் சொல்லியிருக்கிறார்.

சண்டைக் காட்சியில் நடிப்பது பெரிதா? என்று மிகச் சாதாரணமாக மேதாவிகள் கேட்பார்கள். அதுவும் ஒரு கலைதான், திறமையான நடிப்புதான். முக்கியமாக எதிராளியை அடிக்காமல் நடிப்பது மிகப்பெரிய கலை. அந்தக் கலையிலும் சரி, அந்த சண்டைக் காட்சிகளின் பின்னணியிலும் சரி, இரண்டிலும் மேலோங்கி நிற்பது மக்கள் திலகத்தின் மனிதாபிமானம்.

மக்கள் திலகம் திரைப்படங்களில் நிறைய சண்டைக் கலைஞர்களை அடிப்பது போல நடிப்பது, அந்தக் கலைஞர்களின் வயிற்றில் அடிவிழக் கூடாது என்பதற்காக.

(ஸ்ரீதர் சுவாமிநாதன்
 

Leave a comment

Comment