தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி தவமணிதேவி ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர், தனது 15 வயதில், 1937 ஆம் ஆண்டில், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த "சதிஅகல்யா" படத்தில் அறிமுகமானார். இப்படத்தில், அரைக்கால் டவுசர், ஆண்களின் சட்டை அணிந்து நடித்தார். தமிழில் இவ்வுடைகளை அணிந்து நடித்த முதல்நடிகை தவமணி தேவிதான். எல்லீஸ். ஆர்.டங்கன் இயக்கிய இப்படம், 100நாட்களைக் கடந்து ஓடியது.
1941ஆம் ஆண்டில் வெளியான "வனமோகினி" என்ற லேடிடார்ஜான் கதை படத்தில், சிலவித கவர்ச்சியுடைகள் அணிந்து, கவர்ச்சியாக நடித்தார்.
தவமணிதேவிக்கு பல சிறப்புகள் உள்ளன. அவையாவன.
1.விமானத்தில் பயணித்து வந்து, தமிழ் திரைப்படங்களில் நடித்த முதல் நடிகை இவர்தான்.
2. பரதநாட்டியம், மேலைநாட்டு நடனம், துப்பாக்கி சுடுதல், தற்காப்புக்கலை, கர்நாடக இசை, ஆடை வடிவமைப்பு, கவிதை, ஒப்பனைக்கலை, வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிலும் வல்லுநராக விளங்கிய முதல் தமிழ்ப்பட நடிகையும் இவர்தான்.
3.தியாகராஜ பாகவதர், படங்களில் நடிக்க 5000 ரூபாய் சம்பளம் வாங்கியபோதே, 16000 ரூபாய் சம்பளம் வாங்கி, நாயகனை விட அதிக சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகையாக விளங்கியவர் இவர்தான்.
4.உயர்கல்வி கற்ற முதல் தமிழ்நடிகையும் இவர்தான். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
5. இவர் தந்தை காா்த்திகேசு சுப்ரமண்யம், யாழ்ப்பாணம் உயர்நீதிமன்ற நீதிபதியாவார். பெரிய அந்தஸ்து, வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து, நடிகையான முதல் தமிழ்ப்பெண் இவர்தான்.
6.நீச்சலுடையணிந்த நிலையிலான, தன் புகைப்படங்களைப், பத்திரிக்கையாளர்கள் வெளியிட அனுமதித்த முதல் தமிழ்நடிகையும் இவர்தான்.
7. சொந்தக்குரலில் பின்னணி பாடிய முதல் தமிழ்நடிகையும் இவர்தான். படம் வனமோகினி.
8. எம்.ஜி.ஆர், கதாநாயகனாக அறிமுகமான, "ராஜகுமாரி" படத்திலும், பிரதான துணைபாத்திர வேடத்தில் நடித்துள்ளார் தவமணி தேவி.
9.எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமான "சகுந்தலை" படத்தில், "மேனகை" வேடத்தில் நடித்த தவமணிதேவி, மார்க்கச்சையும், டிரான்ஸ்பரண்ட் ஜார்ஜெட் பாவாடையுமணிந்து நடித்தாா். இவ்வுடைகளை அணிந்து நடித்த முதல் தமிழ்நடிகையும் இவர்தான்.
10."வனமோகினி" திரைப்படத்தில், மலேயா, மாலத்தீவு, ஹவாய் நாடுகளிலுள்ள பெண்களணிந்த "sarong" என்ற கவர்ச்சியுடை அணிந்து நடித்த முதல் தமிழ் மற்றும் இந்திய நடிகை தவமணிதேவிதான்.
டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தன் கண்ணழகு, உடல்நளினத்தால், கவர்ச்சி தாரகையாக பிரபலமானவுடன், ஆடை மற்றும் உடல்வாகு ரீதியாக கவர்ச்சியாக நடித்துவந்த இவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. எந்தவொரு சூழலிலும், படவாய்ப்புகளைத் தேடிச்செல்லாத தவமணிதேவி, படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 11 படங்களே நடித்த தவமணிதேவியின் இறுதிப்படம், 1949ஆம் ஆண்டில் வெளியான "நாட்டியராணி" என்பதாகும்.
இராமேஸ்வரத்திலிருந்த கோடிலிங்க சாஸ்திரி என்ற தன்உறவினரை, 1962ஆம் ஆண்டில், காதலித்து மணந்துகொண்ட, தவமணிதேவி, எந்தவொரு திரைப்பட நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. தன் திரையுலகப் பிரபலத்தையும், வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தீவிர ஆன்மீகவாதியாக வாழ்ந்து, இராமேஸ்வரத்திலேயே, 2001ஆம் ஆண்டில், தன் 76ஆம் வயதில் (81வயதில் இறந்தார் என்றொரு கருத்தும் நிலவுகிறது) தவமணிதேவி காலமானார்.
பின்குறிப்பு: 1938 ஆம் ஆண்டில் வெளியான "வனராஜ கார்சன்" படத்தில், நாயகியாக நடித்த கே.ஆர்.செல்லம், அப்படத்தில், தவமணி தேவியையே மிஞ்சும் வகையில், புலித்தோலாடை அணிந்து, தன் தொடைகள் பெருமளவு தெரியும்படி நடித்ததால், பலரின் கண்டனத்திற்கு ஆளானார். ஆகவே, இவரே, "தமிழ்த்திரையுலகின் முதல் கவர்ச்சிக்கன்னி" என்பவர்களும் உள்ளனர். எனினும், இந்த ஒரே படத்துடன் அவர் கவர்ச்சிக்கு முழுக்குபோட்டு, குடும்பப்பாங்கான வேடங்களிலேயே தொடர்ந்து நடித்துவந்ததாலும், தமிழ் ரசிகர்கள் மனதில், அவர் பிம்பம், கவர்ச்சிக்கன்னியாகப் பதியாததாலும், அக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை.
Kalimuthu Raj


