TamilsGuide

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது

எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் 'பெற்றத்தால்தான் பிள்ளையா' என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).

மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.

2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.

1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.
--
Sukumar Shan

Leave a comment

Comment