சூப்பர் ஹிட் பாடல் ஒன்று உருவாவதற்கு பின்னால் பல சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், காலம் தாண்டி இன்றும் ரசிக்கப்படும் இந்தப் பாடல் உருவாக்கத்தின் போது சில சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தப் பாடல் ட்யூனுக்கு 10 நாட்களாக வரிகளை எழுத முடியாமல் கவிஞர் வாலி திணற,
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தப் படத்தில் நம்பியார் வில்லனாக நடித்திருந்தார். படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
இந்தப் படம் உருவானபோது, எம்.ஜி.ஆர் - கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், கண்ணதாசனை தவிர்த்து, இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுத முடிவெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் பெரும்பாலான பாடல்களை வாலி எழுதியிருப்பார். படத்தில் அடிமைகளை மீட்டு கப்பலில் அழைத்து வரும்போது, அவர்களுக்கு உற்சாகமளிக்கும் காட்சிக்கு பாட்டு எழுத வேண்டும்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்துக் கொடுத்த டியூனை கேட்ட வாலிக்கு வரிகள் கிட்டவில்லை. இதனால் அவர் 10 நாட்கள் பாட்டு எழுத முயற்சி செய்து வந்ததாகவும், மற்ற கவிஞர்களும் அந்த டியூனுக்கு பாடல் எழுத திணறியதாகவும் கூறப்படுகிறது. அப்படியிருக்கும்போது, இறுதியாக, கண்ணதாசனிடம் கேட்குமாறு எம்.ஜி.ஆர் கூற, உடனே 10 நிமிடத்தில் பல்லவி எழுதி கொடுத்து பாட்டையே எழுதி முடித்துள்ளார் கண்ணதாசன்.
பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கும் வரிகள் பிடித்துப்போனது. பின்னர் எம்ஜிஆர், கண்ணதாசனை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பாடல் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்.. இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்’ பாடல். இன்றும் ரசிகர்களிடையே ரசிக்கப்படும் பாடலாக திகழ்கிறது.
Devaraj Andrews


