TamilsGuide

தர்மன் படப்பிடிப்பிற்கு தயாராகும் சிம்ரன் - ரஜினியுடன் மீண்டும் இணைவதில் நெகிழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை சிம்ரன் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

2019-ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படத்திற்குப் பிறகு, சிம்ரன் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற 'தர்மன்' படத்தின் தொடக்க விழாவில் சிம்ரன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். "பேட்ட படத்திற்குப் பிறகு நான் ரஜினி சாரைச் சந்தித்தபோது, அவருடன் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். இந்த வாய்ப்பிற்காக நான் நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன்.

தற்போது அது நனவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்துடன் தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, 'ஓ மை கடவுளே' பட புகழ் 'அஸ்வத் மாரிமுத்து' இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த் கையில் ரத்தக்கறையுடன் கூடிய அறுவை சிகிச்சை கத்தியை ஏந்தி, ஒரு மருத்துவர் உடையில் மிரட்டலாகக் காட்சியளிக்கிறார்.

இப்போஸ்டரில் 'தி டெட்லி டாக்டர் என்ற டேக்லைனும், "தர்மமே வெல்லும்!" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று இயக்குநர்கள் மாற்றத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து கைகளுக்கு வந்துள்ள இத்திரைப்படம், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஸ்டைலான மற்றும் மாஸான ஆக்ஷன் த்ரில்லர் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment