ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம்: 80 மற்றும் 90களில் நீங்கள் பார்த்த முன்னணி நாயகர்கள் பலரின் படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்த முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் இவர். டக்கென்று எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் சுந்தர் சி நடித்த தலை நகரம் படத்தின் வில்லன் இவர். பாய் என்ற வேடத்தில் வித்யாசமான நடிப்பால் மிரட்டி இருப்பார்.
90களில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் தூர்தர்சனில் திரைமலர் என அரைமணி நேர சிறுபடத்தொகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்னைக்காவது ஒரு நாள் திரைமலரை ஒத்திவைத்துவிட்டு மலரும் நினைவுகள் என்று பிரபலங்களின் பேட்டியை ஒருமணி நேரம் ஒளிபரப்புவார்கள், பின்னாட்களில் இந்த நிகழ்ச்சி தொடரும் நினைவுகள் என மாற்றியமைக்கப்பட்டது. 90களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அப்படியாக மலரும் நினைவுகளில் தான் ஜூடோ ரத்னம் தன்னை பற்றிய முழு விவரங்களையும் பகிர்ந்து கொண்டார் அப்போதான் ஜூடோ ரத்னத்தின் புகழே எனக்கு தெரிந்தது.
இவரது மகன் ஜூடோ ராமுவும் தந்தை பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே சினிமாவில் இவரும் முன்னணி ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றினார். இவரும் முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகம் பணியாற்றினார்.
சினிமாக்களில் ரஜினி, கமல் இருவருக்கும் சினிமாக்களில் சண்டை கற்றுக்கொடுத்தவர் இவரே, 1500 படங்கள் பணியாற்றிய இவர் ரஜினியின் 46 படங்களுக்கு பணியாற்றியுள்ளார். கடைசியாக இவர் ரஜினிகாந்துடன் பாண்டியன் படத்தில் பணியாற்றினார். 1500 படங்களுக்கு மேல் பணியாற்றிய சண்டை இயக்குனர் என இவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றவர்.
தலைநகரம் திரைப்படம் மட்டுமின்றி அதற்கு முன்பே தாமரைக்குளம், கொஞ்சும் குமரி, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்.
1966ம் ஆண்டு வெளியான வல்லவன் ஒருவன் படத்தின் மூலம் சண்டைப்பயிற்சியாளராக அறிமுகமான இவர் எண்ணற்ற படங்களில் தனது அதிரடியான சண்டைக்காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனதிற்குள் உட்கார்ந்தவர், அப்போலாம் படத்துல எத்தனை பைட்டு என்றே நண்பர்களுக்குள் சிறு வயதில் பேசிக்கொள்வோம். அந்த அளவு சண்டைக்காட்சிகள் உள்ள படங்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது
இவரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம், இவர் மறைந்தபோது கூட இவர் குடியாத்தத்தில் இருந்தாலும் சென்னை ஸ்டண்ட் யூனியனுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக இவரது உடல் வைக்கப்பட்டது.
காயத்ரி, முரட்டுக்காளை, நெற்றிக்கண், போக்கிரிராஜா, சகலகலா வல்லவன், மலையூர் மம்பட்டியான், பாயும் புலி, தங்கைக்கோர் கீதம் , முந்தானை முடிச்சு, நீங்கள் கேட்டவை, ஈட்டி, சின்ன வீடு, கெட்டிமேளம், மிஸ்டர் பாரத், மனிதன், கூலிக்காரன், குரு சிஷ்யன் இன்னும் பல படங்களை சொல்லலாம். இதில் வித்யாசமான பைட் ஒன்று என்னை கவர்ந்தது அது நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்ற டீக்கடை பெஞ்சு பைட், இந்த பைட் பற்றி அப்போதே வந்த மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் சிலாகித்து பேசி இருப்பார் ஜூடோ. மேலும் இவரின் படங்களின் பைட் அனலாக இருக்கும் என்றால் மாற்றுக்கருத்தில்லை. இவரை பாக்யராஜ் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.
1980ல் சங்கர் கணேஷ் நடிப்பில் இசையில், பேராசிரியர் ஏ.எஸ் பிரகாசம் இயக்கத்தில் வெளியான படம் ஒத்தையடி பாதையிலே, செப்புக்குடம் தூக்கி வந்த செல்லம்மா என்ற பாடல் இந்த படத்தில் புகழ்பெற்றது, இந்த் படத்தை தயாரித்தவர் ஜூடோ ரத்னம்தான் ஆக இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.
90களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தீவிர சண்டைப்பயிற்சியாளராக இவர் இருக்கவில்லை. அவ்வப்போது சின்ன சின்ன படங்கள், மாற்றுமொழி படங்களில் தான் பின்னாட்களில் இவர் அதிகம் பணியாற்றியுள்ளதை பார்க்க முடிகிறது. தமிழ்ப்படங்களில் 90களுக்கு பிறகான காலக்கட்டங்களில் குறைவாகவே இவர் பணியாற்றி இருப்பதை பார்க்க முடிகிறது.
விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், தளபதி தினேஷ், ஜாகுவார் தங்கம், ராக்கி ராஜேஷ், ராம்போ ராஜ்குமார், ஃபெப்சி விஜயன், ஸ்டன் சிவா, பொன்னம்பலம், ஜூடோ கே. கே. ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், ஆம்பூர் ஆர். எஸ். பாபு, எம். ஷாகுல் ஹமீது, குன்றத்தூர் பாபு, அழகு மற்றும் வெங்கல் ராவ் போன்ற ஸ்டண்ட் கலைஞர்கள், சண்டை பயிற்சியாளர்கள் இவரின் மாணவர்களே.
இவர் முதன் முதலில் தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக தான் அறிமுகம் ஆகி இருக்கிறார், அதற்கு பிறகே வல்லவன் ஒருவன் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக மாறி இருக்கிறார்.
இவர் 2006ம் ஆண்டு நடித்த தலைநகரம் வில்லன் வேடம் சிறப்பானது. வயதானாலும் இவர் சிங்கம்தான் என சொல்வது போல கம்பீர வில்லன் வேடத்தில் கலக்கி இருப்பார். ஜூடோ ரத்னம். கடந்த 2023ம் ஆண்டு தனது 93 வது வயதில் குடியாத்தத்தில் இவர் காலமானார்.
Abiram Arunachalam


