TamilsGuide

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் மிக முக்கியமான தேசிய பயிற்சி நிறுவனமாகிய களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின்  நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழா மாநாட்டை, நேற்று (01) களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் இந்த நிறுவனம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆற்றி வரும் மகத்தான சேவையைப் பாராட்டிய பிரதமர், தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா என்பது இலங்கையின் பொதுச் சுகாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கலாகும் என்றும் நாட்டின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் ஒரு நூற்றாண்டு காலமாக இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே இதுவாகும் என்றும் தெரிவித்தார். 

தாய் மற்றும் சேய் நலம், நோய்த்தடுப்புத் திட்டங்கள், நோய்த்தடுப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள், பலமான பொதுச் சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன் முதுமை அடையும் சனத்தொகை, தொற்றா நோய்களின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புதிய சுகாதார அனர்த்தங்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடிய திறமையான சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நவீன சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தியதுடன், வைத்தியர் துஷார பெர்னாண்டோ ‘NIHS – Past, Present and Future”‘ எனும் தலைப்பில் முதன்மை உரையை நிகழ்த்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் “NIHS – 100 Years  ஞாபகார்த்த நூல் வெளியீடும் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த அஞ்சல் முத்திரை ஆகியனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்றஉறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், பங்காளி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சுகாதார வல்லுநர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment