• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் – கௌரவ சுகாதார அமைச்சர் உறுதியளிப்பு:

இலங்கை

கடந்த சனிக்கிழமை கௌரவ சுகாதார அமைச்சர், கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை நேரில் பார்வையிட்டதுடன், பல மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். மேலும், வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு வசதிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன்போது, தற்போது சேவையில் உள்ள CT Scan இயந்திரத்தையும் கௌரவ சுகாதார அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வியந்திரம் தொடர்ச்சியாக பெருமளவிலான நோயாளிகளுக்கு சேவை வழங்கி வருவதால், அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் அவசியம் என்பதை கதிரியக்க நிபுணர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இதனை கவனத்தில் கொண்ட கௌரவ சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், அடுத்த ஆண்டில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இந்த புதிய CT Scan இயந்திரம் நிறுவப்படுவதன் மூலம் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதுடன், அவசர மற்றும் விசேட மருத்துவ சேவைகள் மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கும். அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க சேவைகள் மேலும் வலுப்பெற்று, வடக்கு மாகாண மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும். 
 

Leave a Reply