TamilsGuide

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுனரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ”ஆளுனரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுனரே செயற்படாதே, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணிக்கு மாநகரசபையிடம் காணி உரிமம் உண்டா?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை வெளிபடுத்து” என பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment