TamilsGuide

சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு சர்வஜன அதிகாரம் அவசரக் கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது குறித்துப் பலத்த கவலை வெளியிட்டுள்ள ‘சர்வஜன அதிகாரம்’ கட்சி, இவ்விடயத்தில் உடனடியாக தலையிடுமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான இராணுவ வீரராக சுரேஷ் சலே ஆற்றிய தனித்துவமான சேவையையும், தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையிலும் இத்தகையதொரு வீரருக்கு கிடைக்க வேண்டிய உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த விவகாரத்தில் தாமதமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ள ‘சர்வஜன அதிகாரம்’ கட்சி, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“எங்களுக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி, சுரேஷ் சலேயின் சுகாதார நிலை நாளுக்கு நாள் மிக வேகமாக மோசமடைந்து வருகிறது.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விடுத்துள்ள மனிதாபிமானக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்த தரப்பு என்ற வகையில் ஜனாதிபதியாகிய உங்களது நேரடிப் பொறுப்பாகும்.

காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் அடிப்படை மனித உரிமைகளையும், சுகாதாரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமையாகும்.”

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரின் உடல்நிலை குறித்து ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அது உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அக்காட்சி எச்சரித்துள்ளது.

இத்தகையதொரு அசம்பாவிதம் நேர்ந்தால், அது இலங்கையின் சர்வதேச பிம்பத்திற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக நாட்டின் மீதுள்ள நம்பகத்தன்மைக்கும் பாரிய களங்கத்தை ஏற்படுத்தும்.

தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்த உத்தியோகபூர்வ அதிகாரம் என்ற வகையில், அதன் முழுமையான நேரடிப் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க நேரிடும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சி தனது கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment