ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, கலைவாணரிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கலைவாணர் . மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கலைவாணர் . அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் கலைவாணர்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கலைவாணரின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார்.
அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.
- தி இந்து .


