கனேடிய ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்றில் விசாரணை
கனேடிய தயாரிப்பான துப்பாக்கிகள் ரஷ்யர்கள் கையில் காணப்படுவதைக் காட்டும் காட்சிகள் சில சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயம் பரபரப்பை உருவாக்கிய நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.
சமீபத்தில், சமூக ஊடகங்களில், கனேடிய தயாரிப்பான Cadex rifle வகை துப்பாக்கிகள் மாஸ்கோவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகின.
அத்துடன், ரஷ்ய ஸ்னைப்பர்கள் என்னும் துப்பாக்கி சுடும் வீரர்கள் கனேடிய துப்பாக்கிகளை வைத்திருக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
விடயம் என்னவென்றால், ரஷ்யா உக்ரைனை ஊடுருருவியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட்டதால், கனடா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
அப்படியிருக்கும் நிலையில், கனேடிய துப்பாக்கிகள் ரஷ்யர்களை சென்றடைந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யர்கள் கையில் கனேடிய துப்பாக்கிகள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பு, கியூபெக்கிலுள்ள ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டது.
அதைத் தொடர்ந்து Cadex நிறுவனமும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியது.
Cadex நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், அந்நிறுவன தயாரிப்பான துப்பாக்கிகள், மோசடியாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாங்கள் மேற்கொண்ட விசாரணையில், தங்கள் நிறுவனம் வேறொரு இடத்துக்கு அனுப்பிய துப்பாக்கிகள், மோசடியாக ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக Cadex நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த துப்பாக்கிகளை ரஷ்யாவுக்கு அனுப்ப Cadex நிறுவனம் அங்கீகாரமோ, அனுமதியோ அளிக்கவில்லை என்றும், தங்களுக்குத் தெரியாமலே அவை ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் Cadex நிறுவனம் தெரிவித்துள்ளது.






















