TamilsGuide

கனடா நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

கனடாவின் மணிடோபா மாகாணத்தில் எஞ்சின் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12:30 மணியளவில், நெடுஞ்சாலை 304-ல் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளதாகப் பவர்வியூ பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அந்த பைப்பர் (Piper) ரக விமானம் செயின்ட் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திலிருந்து ரெட் சக்கர் ஏரிக்கு  சென்றுகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் ஒரு விமானி மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 7 பேர் இருந்தனர்.

விமானி மிகவும் சாதுர்யமாக விமானத்தை நெடுஞ்சாலையின் நடுவே பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தரையிறக்கத்தின் போது விமானத்திற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், சிறிய ரக விமானம் ஒன்று சாலையின் குறுக்கே நிற்பதும், அதன் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தெரிந்தது. மீட்புப் பணிகளுக்காக இந்த நெடுஞ்சாலை சுமார் இரண்டு மணி நேரம் மூடப்பட்டது.

விமானம் அகற்றப்பட்ட பிறகு, போக்குவரத்து மீண்டும் சீரானது. "தற்போது இந்தச் சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்," என்று போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலையில் திடீரென விமானம் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் அனைவரும் நிம்மதியடைந்தனர். 
 

Leave a comment

Comment