TamilsGuide

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய் ... 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. 108 இடங்களில் வென்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறும் முயற்சியில் த.வெ.க. தீவிரமாக ஈடுபட்டது. இதில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை இன்று அளித்தது. அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 5 பேர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கையெழுத்த கடிதத்தை விஜயிடம் வழங்கினார்.

இதனால், தமிழக வெற்றிக்கழகத்திற்கு பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 6 பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய். அப்போது த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் எப்போது வேண்டுமானாலும் த.வெ.க. தலைவர் விஜயை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சென்னை வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வழங்கினார். 
 

Leave a comment

Comment