TamilsGuide

முஸ்லிம் தேசத்தின் முன்னோடி தந்தை செல்வா.

26-04-2026 அன்று தந்தை செல்வாவின் 49வது சிரார்த்த தினத்தையொட்டி கனடா, டொரோண்டோவில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் ஆற்றப்பட்ட எனது உரையின் தொகுப்பு.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்.
தந்தை செல்வா அவர்களை தமிழ் மக்களின் தலைவராக மட்டும் விழித்து, என்னை ஒரு அயலவனாக அழைத்து உரை நிகழ்த்தச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தந்தை செல்வா அவர்களை தமிழ்பேசும் மக்களின் தலைவராக விழித்து, தமிழ்பேசும் ஒருவனாக என்னை அழைத்து உரை நிகழ்த்தக் கேட்பதே சிறப்பு. ஏனெனில் தந்தை செல்வா எனக்கும் உரித்தானவர்; அவர் எனக்கும் எனது மக்களினதும் தலைவரே.
1998ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் அவர்கள் சந்திரிக்காவின் அரசில் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தபோது, தந்தை செல்வா நினைவு நிகழ்வொன்றை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு ஒரு சிறு நினைவு மலர் வெளியிடப்பட்டது. அதில் “வானவர்களின் இறக்கைகளில் தந்தை செல்வா” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மக்களிடையே “வானவர்” என்ற சொல் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் இஸ்லாமியர் அல்லாத ஒருவரை வானவர்களோடு இணைத்து ஒரு நூல் வெளியிடப்பட்டது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பின்னர் அது ஒரு விமர்சனமாக மாறியது. அதன் பின்னர்தான் தந்தை செல்வா தொடர்பில் எனது தேடல்கள் தொடங்கின.

2012 மற்றும் 2013 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்வுகளில் நான் பேச்சாளராக அழைக்கப்பட்டேன். அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்கள் இரு நிகழ்வுகளிலும் நான் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2013ஆம் ஆண்டு சிறப்பு பேச்சாளராக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எனது உரையில் நான் குறிப்பிட்டேன்: “வடக்கு–கிழக்கு முஸ்லிம் மக்களை ஒரு தேசமாக அறிமுகப்படுத்தியவர் தந்தை செல்வா. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பி பல முன்னுதாரண செயற்பாடுகளை மேற்கொண்டவர் அவர். இன்று அவரைப் பற்றி பேச ஹக்கீம் அவர்கள் வந்திருப்பது நல்லது. ஆனால் ஒரு கேள்வி; 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தபோது, அந்த வாய்ப்பை தமிழ்–முஸ்லிம் ஒற்றுமைக்காக பயன்படுத்தாததற்கு காரணம் என்ன?” என்று கேட்டேன்.
இந்தக் கேள்விக்குப் பிறகு மண்டபத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது; ஹக்கீம் அவர்களுக்கும் அதை எதிர்கொள்வது சற்று சங்கடமாக இருந்தது.
இவ்வாறு, தந்தை செல்வா அவர்களின் அரசியல் கொள்கைகளிலும் செயற்பாடுகளிலும் நான் முக்கியமாக கண்ட விடயம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து தனது அரசியல் இலக்கை நோக்கிப் பயணித்தது. 
அந்த அடிப்படையில், வடக்கு–கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களை ஒரு தேசமாக அறிமுகப்படுத்தியதும், அப்பகுதியில் வாழும் அனைவரையும் தமிழ்பேசும் மக்கள் எனக் குறிப்பிட்டமையும்   முக்கியமானது.
அடுத்து, அவரை ஏன் “தந்தை” என்று குறிப்பிடுகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் வடக்கு–கிழக்கில் வாழும் மக்களை முதன்முதலாக ஒரு “தேசம்” என அடையாளப்படுத்தியவர் அவர். நவீன அரசியல் ஒழுங்கில் “தேசம்” என்பது ஒரு இனத்தின் சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் குறிக்கும் உயர்ந்த கருத்தாகும். தமிழ்பேசும் மக்களை ஒரு தேசமாக அறிமுகப்படுத்தியது, அவரை “தந்தை” என மக்கள் அழைப்பதற்கான முக்கிய காரணமாகும்.
அடுத்து, அந்த மக்களுக்கு ஒரு ஆள்புலம்—பூகோள எல்லைகள் கொண்ட நிலம்—அதாவது அவர்களின் “தாயகம்” உள்ளது என அவர் முன்னிறுத்தினார்.
இறுதியாக, அந்த மக்கள் தங்கள் நிலத்தில் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடையவர்கள் என அவர் வலியுறுத்தினார்.
“தேசம், தாயகம், சுயநிர்ணயம்” ஆகியவை தமிழ்மொழி பேசும் மக்களுக்கான அடிப்படைகள் என அவர் முன்வைத்தார். இதன் மூலம் தமிழ்பேசும் இலங்கை மக்களின் அரசியல் அங்கீகாரம் உலகளவில் வெளிப்பட்டது. இந்த அடிப்படைகளை சிங்களம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தமிழ்பேசும் மக்களை அடக்கி ஆள முடியும், அவர்களின் வளங்களை சூறையாட முடியும், அவர்களை கீழானவர்களாக நடத்த முடியும் என எண்ணினர். காஷ்மீர், ரோஹிங்கியா, தென் சூடான், பாலஸ்தீனம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களைப் போலவே தமிழ்பேசும் மக்களையும் அரசியல் அடக்குமுறையில் வைத்திருக்க முடியும் என சிந்தித்தனர். ஆனால் தந்தை செல்வா அவர்களின் அரசியல் அணுகுமுறை அந்த எண்ணத்தை சிதைத்தது.
1949 முதல் 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை தந்தை செல்வா அவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியலை ஒரே திசையில் முன்னெடுத்தார். 1980களுக்குப் பிறகு நிலைமைகள் மாறின. 36க்கும் மேற்பட்ட தமிழ் போராட்டக் குழுக்கள் தோன்றின. “தமிழ்பேசும் மக்கள்” என்ற அடையாளம் சிதைந்து, தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் எனப் பிளவு  ஏற்பட்டது. பல உரிமை மீறல்களும் கசப்பான அனுபவங்களும் நிகழ்ந்தன.
1980 முதல் 2009 வரை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஒரு தலைமை இருந்தது. ஆனால் இன்று தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை யார் வழிநடத்துகின்றனர்? வடக்கு–கிழக்கு முஸ்லிம் மக்களின் உரிமை அரசியலை யார் முன்னெடுக்கின்றனர்? இந்தக் கேள்விகள் கடந்த 17 ஆண்டுகளாக பதில் இன்றியே உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளின் அனுபவங்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு கூட்டு முயற்சியையும், கூட்டு தலைமைத்துவத்தையும் நாம் சிந்திக்க வேண்டாமா?
இந்த சிந்தனையை தந்தை செல்வா நினைவு தினத்தில் உங்களிடம் விட்டு செல்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி.

 

26-04-2026
அ.அஸ்மின்
 

Leave a comment

Comment