TamilsGuide

வேட்டையன்-கங்குவா க்ளாஷ்....

வேட்டையனும் கங்குவாவும் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.

1977ல் கவிக்குயில்னு ஒரு படம். அதில் நாயகன் சிவகுமார். அதில் முருகன் என்கிற குலத்தில் தாழ்ந்ததாக சொல்லப்படும் முருகன் என்கிற கதாபாத்திரம். முருகனாக புதிய வரவு ரஜினிகாந்த். இருவரும் அந்தப்படத்தில் நடித்தனர்.

பிறகு புவனா ஒரு கேள்விக்குறி. இதில் சிவக்குமாருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம். இந்த கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி படங்களுக்கு பணியாற்றிய பஞ்சு அருணாச்சலம் 'ப்ரியா' படத்துக்கு சிவக்குமார்-ரஜினி இரட்டை ஹீரோக்களை புக் செய்கிறார். இரண்டு மொழிகளில் தமிழில் சிவா-ரஜினி, கன்னடத்தில் அம்பரீஷ்-ரஜினி. பாடல்கள் பதிவாகி ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் சிவக்குமார் படத்திலிருந்து விலகிக்கொள்கிறார்.

இப்போது சிவக்குமார் விலகியதால் ரஜினி என்கிற ஒற்றை மனிதரின் மேல் முழுப்படத்தின் பாரமும் விழுகிறது. இதனால் பஞ்சு கதையை மாற்றுகிறார். சிவக்குமாரின் பாடல்களுக்கு ரஜினி நடிப்பதற்காக கதையில் துப்பறியும் வக்கிலான கணேஷ் ரஜினி நடிகனாக மாறுவதாக கதையை கலைத்துப்போடுகிறார். எப்படியோ ஒட்டி வெட்டி படம் வந்தாலும் ரஜினி என்கிற ஒற்றை மனிதராலும், இளையராஜாவின் அற்புதப்பாடல்களாலும் படம் பெரும் வெற்றி பெறுகிறது. எனக்குத்தெரிந்து 'டார்லிங்' என்கிற வார்த்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்தது இப்படத்தின் பாடலால் எனலாம்.

சிவக்குமார் ஸ்டெடியான ஹீரோவாக தன் பாதையில் சென்று கொண்டிருக்க அதிரடியாக ரஜினி அவரை முந்திச் சென்று கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு என சிவக்குமாரின் வெற்றிப்படங்களுக்குப்பிறகு தேவர் ரஜினியை தனது படத்து நாயகனாக்குகிறார். அது 'தாய் மீது சத்தியம்'.

ரஜினி-கமல் நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தின் ரிலீஸான அதே நாளில் சிவக்குமாரின் 'சிட்டுக்குருவி' ரிலீசாகிறது. இரண்டுமே ராஜாவின் பாடல்களால் பட்டி தொட்டியென புகழ்பெற்றாலும் இளமை ஊஞ்சலாடுகிறது முந்துகிறது.

ப்ரியா என்கிற ஆக்ஷன் படங்கள் வெளிநாடுகளில் எடுத்து பெரும் வெற்றி பெற்றதால் அதே பாணியில் சிவக்குமாரை வைத்து 'ராமன் பரசுராமன்' படத்தை எடுக்கின்றனர். அந்தப்படம் ரிலீசான அதே நாள் ரஜினியின் காளி படம் வெளியாகிறது. இரண்டுமே சுமார் வெற்றி தான்.

சிவக்குமாரின் ஆனந்தராகம் படமும், ரஜினியின் போக்கிரிராஜா படமும் மோதுகின்றன 1982ல். ஆனந்த ராகம் சுமாரான வெற்றி. தேவரின் தாய்வீடு படத்தோடு சாட்டை இல்லாத பம்பரம் என்கிற சிவாவின் படம் மோதுகிறது. நான் மகான் அல்ல படத்தோடு சிவக்குமாரின் குவாகுவா வாத்துக்கள் படம் ஒரே நாளில் ரிலீசாகின்றன.

படிக்காதவன் சிவாஜி-ரஜினி நடிக்க, குருநாதர் கே.பியின் சிந்து பைரவிசிவா நடிக்க ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே பெருவெற்றி பெறுகின்றன. அதேப்போல் கலைஞரின் பாடாத தேனீக்கள் படமும், பாரதிராஜாவின் கொடி பறக்குது படமும் ஒரே நாளில் ரிலீசான வரலாறும் உண்டு. பொதுவாக பார்த்தால் நிறைய ரஜினி-சிவக்குமார் படங்கள் பத்து நாள் இடைவெளியில் நிறைய படங்கள் ரிலீசாகி இருக்கின்றன.

அக்னிசாட்சி என்கிற படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் ரஜினிகாந்தாகவே நடிக்கிறார். குருநாதர் கே.பியின் மார்க்கெட்டிங் உத்தி.

காலம் எப்படியெல்லாம் மாற்றிப்போடுகிறது. இன்று இதே சிவக்குமாரின் மகன்கள் சூர்யாவின் படத்தோடு ரஜினியின் படமும் ரிலீசாகிறது என்றெல்லாம் சிவக்குமார் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.....

-கோவிந்ராசு

Leave a comment

Comment