107-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கனடியர்
கனடா
கனடாவின் மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கு நல்ல பழக்கவழக்கங்கள் மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.
அதற்குச் சிறந்த உதாரணம், கனடாவின் மிக வயதான மனிதர்களில் ஒருவரான இவான் வின்னிச்சுக் திகழ்கின்றார்.
செவ்வாய்க்கிழமை அன்று மிசிசாகாவில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவான் தனது 107-வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.
இவானின் இந்த நீண்ட ஆயுள் ஒரு அதிசயம் என்றே சொல்ல வேண்டும். 1919-ல் உக்ரைனில் பிறந்த இவரது வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
1930-களில் சோவியத் ஒன்றியத்தால் உருவான 'ஹொலோடோமோர்' (Holodomor) பஞ்சத்தில் இவரது குடும்பம் சிதைந்தது.
சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது, கைக்குழந்தையாக இருந்த தனது தம்பியைப் பிரிந்தார். 1941-ல் ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கிருந்து தந்திரமாகத் தப்பினார்.
ராணுவ முகாமில் இருந்த ஒரு ஜீப்பில் ஏறி அமர்ந்து, தான்தான் அதன் ஓட்டுநர் (Chauffeur) போல நடித்தார். அந்த ஜீப் கப்பல் மூலம் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டபோது, அதிலேயே தப்பிச் சென்று அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1951-ல் கனடாவிற்கு குடிபெயர்ந்த இவான், லண்டன் (ஒன்டாரியோ) பகுதியில் தனது மனைவி ஓல்காவுடன் குடியேறினார். பல சவால்களைக் கடந்து ஒரு வீட்டைக் கட்டி, அழகிய குடும்பத்தை உருவாக்கினார்.
இன்று அவரது மனைவியும் மகளும் உயிருடன் இல்லை என்றாலும், அவரது பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேத்திகள் அவரைப் பெருமையுடன் கொண்டாடுகின்றனர். "எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்" என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இப்போதும் தனது கொள்ளுப் பேத்திகளுடன் சேர்ந்து காகிதக் கலை (Origami) செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
"மது அருந்துவதில்லை, புகைபிடிப்பதில்லை" என்பதே அவரது தாரக மந்திரம். எந்தச் சூழலிலும் கவலைப்படாமல் (No Stress), நேர்மறையான எண்ணங்களுடன் (Positive thinking) இருப்பதே அவரை இவ்வளவு காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.






















